அப்பாவின் கனவை நிறைவேற்றப் பிறந்த தேவதை; பிரதிகா எனும் போராட்டக்காரி சாதித்த கதை
முல்லை பெரியாறில் வெள்ளப்பெருக்கு: உப்பார்பட்டி தடுப்பணை உடைப்பு; தவிக்கும் தேனி விவசாயிகள்
தேனி வீரபாண்டி அருகே முல்லை பெரியாற்றின் குறுக்கே கட்டபட்டுள்ளது உப்பார்பட்டி தடுப்பணை. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால் முல்லை பெரியாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தால் உப்பார்பட்டி தடுப்பணை உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. உப்பார்பட்டி தடுப்பணையிலிருந்து வரும் நீரை நம்பியிருக்கும் 5 கிராம விவசாயிகள் இனி தண்ணீருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து பேசிய விவசாயி ஆண்டி, “ வைரவர் ஆறு, சுருளி ஆறு இரண்டு ஆறுகளும் இணைந்து தேனி வீரபாண்டி வழியாக சென்று வைகயுடன் கலக்கும். பாண்டிய மன்னர்கள் காலத்தில் இந்த ஆறு செல்லுமிடங்களின் இடையில் தடுப்பணைகள் கட்டினார்கள். தடுப்பணைகள் அருகில் வாய்க்கால் வெட்டி அதில் நீரை திருப்பிவிட்டு விவசாய தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.

பாலாறுபட்டி, குண்டல் நாயக்கன்பட்டி, உப்பு கோட்டை, உப்பார்பட்டி, வீரபாண்டி ஆகிய ஐந்து ஊர்களில் உள்ள சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன வசதிக்காக பாண்டிய மன்னர் காலத்தில் கட்டபட்டது இந்த உப்பார் பட்டி தடுப்பணை. முல்லை பெரியாறு அணை கட்டிய பிறகு அந்த நீரும் இந்த சுருளி ஆற்றில் கலந்து சென்றதால் பின் நாட்களில் இந்த ஆறு ’முல்லை பெரியாறு’ என்று அழைக்கபட்டது.
1992ன் போது முல்லை பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது உப்பார்பட்டி தடுப்பணை உடைந்தது. அதன் பிறகு அடுத்த வருடமே திரும்ப தடுப்பணை உடைப்பை சரி செய்தனர். தற்போது 30 வருடங்கள் கழித்து கடந்த இரண்டு வாரத்திற்கு முன் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் அதே இடத்தில் திரும்பவும் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தடுப்பணை உடைப்பால் வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்லவில்லை. வாய்க்கால் நீரை நம்பி இருக்கும் விவசாயிகள் தங்களுடைய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்த அணை உடைந்து இரண்டு வாரங்களாகியும் இதுவரை எந்த பொதுபணித்துறை அதிகாரியும் இங்கு வந்து பார்க்கவில்லை. தடுப்பணை உடைந்ததே அதிகாரிகளுக்கு தெரியுமா என்றே தெரியவில்லை. அரசு இதை கவனத்தில் எடுத்து கொண்டு உடனே தடுப்பணையை சரி செய்ய வேண்டும்” என்றார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங்கிடம் விளக்கம் கேட்டோம், “ மழையால் பாதிக்கபட்ட இடங்களை நேரடியாக பார்த்து சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். உப்பார் பட்டி தடுப்பணை உடைந்தது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்” என்று உறுதியளித்தார்.

















