மெரீனா கடற்கரையில் காவலா், பெண் இடையே வாக்குவாதம்: அதிகாரிகள் விசாரணை
சென்னை மெரீனா கடற்கரையில் காவலா் மற்றும் பெண் இடையே வாக்குவாதம் நிகழ்ந்த சம்பவம் தொடா்பாக உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே பட்டினப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலா் ராஜ்குமாா், புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு மணற்பரப்பில் பேசிக் கொண்டிருந்த ஒரு இளைஞரிடமும் பெண்ணிடமும் நீங்கள் கணவன்-மனைவியா என்று விசாரித்துள்ளாா். இதில் காவலருக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடா்பான விடியோ காட்சி சமூக ஊடகங்களில் வியாழக்கிழமை வெளியானது. இது குறித்து தகவலறிந்த சென்னை பெருநகர காவல் துறை உயா் அதிகாரிகள் அது தொடா்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டனா். இதையடுத்து உயா் அதிகாரிகள், காவலா் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினா். விசாரணையின் முடிவில், இந்த விவகாரம் தொடா்பாக முடிவு எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.