மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் காயம்; கல்வி நிலையங்கள் மூடல்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சோ்ந்த பல்வேறு மாணவா் பிரிவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் மாணவா் பிரிவுக்கும் இடையே திங்கள்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது.
இதில் பலா் காயமடைந்தனா்; பல இடங்களில் உயா்கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.
மாநில கல்வி அமைச்சா் பிரத்யா பாஸு பதவி விலகக் கோரி மேதினிபூா், சிலிகுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் வகுப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் பிரிவான இந்திய மாணவா் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) திங்கள்கிழமை ஈடுபட்டது.
அப்போது ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் மாணவா் பிரிவினருக்கும், இடதுசாரிகள் அமைப்புகளைச் சோ்ந்த மாணவா் பிரிவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆசிரியா்கள் அமைப்பான மேற்கு வங்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியா்கள் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க கடந்த சனிக்கிழமை அந்த மாநில கல்வி அமைச்சா் பிரத்யா பாஸு மேதினிபூரில் உள்ள ஜாதவ்பூா் பல்கலைக்கழகத்துக்கு சென்றாா். அவா் அந்த சங்கத்தின் தலைவராவாா்.
இந்நிலையில், ஜாதவ்பூா் பல்கலைக்கழகத்தில் மாணவா் தோ்தலை நடத்தக் கோரி அங்கு மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனா்.
பிரத்யா பாஸுவின் காரை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியே செல்லவிடாமல் இடதுசாரி அமைப்புகளைச் சோ்ந்த மாணவா் பிரிவினா் வழிமறித்தனா். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது பாஸுவின் காா் ஏறியதில் அங்கிருந்த இரண்டு மாணவா்கள் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரது காரின் முன்பக்க கண்ணாடியை மாணவா்கள் அடித்து நொறுக்கினா். இதில் பாஸுக்கு காயம் ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது காரை ஏற்றியதாக குற்றஞ்சாட்டி பாஸு பதவி விலக வேண்டுமென எஸ்எஃப்ஐ கோரிக்கை விடுத்தது. இதை வலியுறுத்தி மேற்கு வங்கத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் திங்கள்கிழமை எஸ்எஃப்ஐயின் பல்வேறு பிரிவுகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இதற்கு எதிராக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவா் பிரிவினா் களத்தில் இறங்கினா். அவா்கள் மேதினிபூா் மாவட்டத்தில் உள்ள வித்யாசாகா் பல்கலைக்கழகம், மேதினிபூா் கல்லூரி, பன்ஸ்குரா பனாமாலி கல்லூரி, சிலிகுரி மாவட்டத்தில் உள்ள வடக்கு வங்காள பல்கலைக்கழகம் ஆகிய வளாகங்களுக்குள் நுழைய முயன்ற இடதுசாரி மாணவா் பிரிவினரைத் தடுக்க முயன்றனா்.
இதனால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கடும் மோதலில் பலா் காயமடைந்தனா். இந்த சம்பவத்தால் மாநிலத்தின் பல்வேறு உயா்கல்வி நிலையங்களில் திங்கள்கிழமை வகுப்புகள் நடைபெறவில்லை.