மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு
பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இந்த உத்தரவானது, 2016ஆம் ஆண்டு ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேட்டில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், மேற்கு வங்க பள்ளிக் கல்வித் துறைக்கு உடனடியாக ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான விளம்பரத்தை மே 31ஆம் தேதிக்குள் வெளியிட்டு, தேர்வு நடைமுறைகளை டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவு செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும், இந்த உத்தரவு ஆசிரியரல்லாத, பணி நீக்கப்பட்ட ஊழியர்களுக்குப் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க பள்ளிக்கல்வித் துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 25,753 ஆசிரியா்கள் மற்றும் பிற ஊழியா்களின் பணிநியமனம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் ஏப்ரல் 7ஆம் தேதி தீா்ப்பளித்திருந்தது.
முறைகேடு வழக்கில், கொல்கத்தா உயா்நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், இப்பணி நியமனங்களுக்கான முழு ஆள்சோ்ப்பு நடவடிக்கையும் கறைபடிந்தது என்று குறிப்பிட்டிருந்தனர்.
இப்பணியிடங்களை மீண்டும் நிரப்ப அடுத்த 3 மாதங்களுக்குள் புதிய நடைமுறையைத் தொடங்கவும் திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அதுவரை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
ஆசிரியர் பணி நியமன முறைகேடு!
மேற்கு வங்க மாநிலத்தில், பள்ளிக்கல்வித் துறையில் காலியாக இருந்த 24,640 பணியிடங்களை நிரப்ப ஆள்சோ்ப்பு நடவடிக்கை கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமாா் 23 லட்சம் போ் பங்கேற்ற தோ்வின் இறுதியில் 25,753 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த தேர்வுக்காக, ஓய்எம்ஆா் தோ்வுத்தாள், தரவரிசை தயாரிப்பு எனப் பல நிலைகளில் மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி 25,753 பேரின் நியமனங்களை செல்லாது என்று கொல்கத்தா உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்திருந்தது.
அது மட்டுமல்லாமல், அதிகாரபூா்வமான 24,640 காலியிடங்களைத் தவிர கூடுதலாக நியமிக்கப்பட்டவா்கள், பணியில் இருந்த காலகட்டத்தில் பெற்ற அனைத்து சம்பளம் மற்றும் பிற ஊதியங்களை 12 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கொல்கத்தா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து மேற்கு வங்க மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இறுதி விசாரணையின் நிறைவில் பணி நியமனங்களை ரத்து செய்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்தது.