யாருக்கும், எதற்கும் பயமில்லை..! பாஜகவில் சேர்ந்தது குறித்து கைலாஷ் கெலாட் பேட்டி!
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து ராஜிநாமா செய்த தில்லியின் முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் கடந்த திங்கள்கிழமை பாஜகவில் இணைந்தார்.
தில்லி பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், கெலாட்டின் விலகல் ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
கைலாஷ் கெலாட்டின் ராஜிநாமாவை தில்லி பாஜக வரவேற்றுள்ளது. இது தொடா்பாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, கைலாஷ் கெலாட் துணிச்சலான நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினாா்.
இந்த நிலையில் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கைலேஷ் கெலாட் கூறியதாவது:
ஆம்ஆத்மியில் 10 ஆண்டுகள் இருந்தேன். இந்த முடிவு எளிதானது இல்லை. இது மிகவும் உணர்ச்சிகரமானது. நான் எடுத்ததிலேயே இதுதான் கடினமான முடிவு. ஆனால், இதுதான் சிறந்த முடிவு என்பேன்.
மக்கள் பேசுவதற்கு முன்பு யோசிப்பதில்லை. ஐடி ரெய்டில் எனக்கு எதிராக என்ன வழக்கு நிலுவையில் உள்ளது, சோதனையில் என்ன கைப்பற்றினார்கள்? எதுவுமே இல்லை. நான் எனது சொந்த பிரச்னைகளைக்கு எதிராக போராடி வருகிறேன்.
எதுவுமே இல்லாமல் பிரச்னை கிளம்பியதால் என்னைக் கோபப்படுத்தியது.
தற்போது எது நடந்தாலும் சிறப்பாகவே நடக்கிறது. பிஜேபியை வலுவடைய நான் வேலை செய்வேன்.
எனக்கு கேஜரில்வால் மீது கோபமில்லை. ஆக.15 நிகழ்ச்சியில் முதல்வரின் ஒப்பதலுடன்தான் கலந்துகொண்டேன். அதனால் அது குறித்து எனக்கு வருத்தமில்லை. இதற்கும் என்னுடைய ராஜிநாமாவிற்கும் தொடர்பில்லை.
கடந்த காலங்களில் செயல்பட்டதுபோலவே தற்போது என்னுடைய சிறந்த செயல்பாடுகளைத் தர தயாராக இருக்கிறேன். சுற்று சூழல் மாசு பிரச்னையில் அரசியல் இருக்கக் கூடாது என அமைச்சராக இருக்கும்போதே கூறினேன்.
எனது அடையாளம் கிராமப்புறத்தைச் சேர்ந்தது. நான் விவசாயின் மகன். எதற்கும் பயமில்லை. தொடர்ச்சியாக நான் பயந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். இதை தெளிவுப்படுத்துகிறேன். நான் எதற்கும் பயப்படுவதில்லை. எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. நஜஃப்கர் மட்டுமல்ல தில்லியும் எனது குடும்பம் என்றார்.