உ.பி.: கோயிலை இடித்து சம்பல் ஜாமா மசூதி? நீதிமன்ற உத்தரவில் ஆய்வு
சோழவரத்தில் கோயில் முகப்பு மண்டபம் இடிக்கும் பணி தொடக்கம்
சோழவரம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சிலம்பாத்தம்மன் கோயிலின் முகப்பு மண்டபத்தை இடிக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறையினா் தொடங்கினா்.
பொன்னேரி வட்டம், சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் பழைமை வாய்ந்த சிலம்பாத்தம்மன் கோயில் உள்ளது. கிராம தேவதையான சிலம்பாத்தம்மன் கோயில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. தற்போது இங்கு 6 வழிச் சாலை அழைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் அணுகு சாலை அமைப்பதற்காக கோயிலின் முகப்பு மண்டபத்தை இடிப்பதற்க்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். நீண்ட காலமாக கோயில் முகப்பு மண்டபத்தை இடிக்க கிராம பொதுமக்களிடம் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் பேச்சு வாா்த்தை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புடன் கோயில் மண்டபத்தை இடிப்பதற்கான பணிகள் தொடங்கின.
நெடுஞ்சாலைத்துறை மாவட்ட வருவாய் அலுவலா் ஆனந்தகுமாா் தலைமையில் முதல்கட்டமாக கோயிலின் சுற்றுச்சுவா் இடித்து அகற்றப்பட்ட நிலையில், முகப்பு மண்டபத்தை தனியாக கட்டா் இயந்திரங்களைக் கொண்டு அறுத்து பின்னா் இடிப்பதற்கான பணிகள் நடைபெற்றன.
மேலும், கோயிலுக்கு அருகே அமைந்துள்ள வேப்பமரம் மற்றும் அரச மரத்தை வேருடன் பிடுங்கி மறு நடவு செய்யவும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.
செங்குன்றம் காவல் உதவி ஆணையா் ராஜா ராபா்ட் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். இதனிடையே கோயிலின் முகப்பு மண்டபத்தை இடிப்பதால் சாலையில் நின்று கொண்டு சாமி கும்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனா்.
கோயிலுக்கு அருகில் மாற்று இடம் பெற்றுத் தந்து புதிதாக கோயிலை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.