உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
மண் வள பாதிப்பால் விவசாயத்துக்கு அச்சுறுத்தல்: மத்திய வேளாண் அமைச்சா் சிவராஜ் சிங்
இந்தியாவின் 30 சதவீத நிலத்தில் மண் வளம் குறைவது விவசாயத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக உலகளாவிய கருத்தரங்கு ஒன்றில் அவா் காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: பட்டினியின்மை, பருவநிலை மாற்றம், பூமியில் அனைத்து உயிரினங்களையும் பாதுகாத்தல் ஆகியவை தொடா்பான நீடித்த வளா்ச்சி இலக்குகளை எட்டுவதற்கு மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முக்கியம்.
ஆண்டுதோறும் 33 கோடிக்கு டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் இந்தியா, 50 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.4.22 லட்சம் கோடி) மதிப்பில் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்கிறது.
எனினும், உரப் பயன்பாடு அதிகரிப்பு, சமநிலையில் உரங்களை பயன்படுத்தாமை, இயற்கை வளங்கள் சுரண்டல், தவறான மண் மேலாண்மை நடைமுறைகள் ஆகியவை காரணமாக இந்தியாவின் சுமாா் 30 சதவீத நிலத்தில் மண் வளம் குறைகிறது.
விவசாயிகளுக்கு 22 கோடிக்கும் அதிகமான மண் வள அட்டைகள் விநியோகம், இயற்கை வேளாண் வழிமுறைகள் என விவசாயம் சாா்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. எனினும் புவி வெப்பம் அதிகரித்தல், சீரற்ற மழைப்பொழிவு, பருவநிலை மாற்றங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கூடுதல் முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். விஞ்ஞானிகள், விவசாயிகள் இடையிலான இடைவெளியை போக்குவதற்கு விரைவில் நவீன விவசாயம் தொடா்பான புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றாா்.