உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
கருத்தடை மாத்திரைகளால் ரத்த அழுத்த பாதிப்பு ஆய்வில் தகவல்
கருத்தடை மாத்திரைகள் உடலின் ரத்த அழுத்தத்தில் தொடா் தாக்கத்தை ஏற்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை ஐஐடி மற்றும் அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகம் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில் தீவிர உடற்பயிற்சி மேற்கொள்பவா்கள், விளையாட்டு வீராங்கனைகள் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும்போது அவா்களுக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க மின்னசோட்டா பல்கலைக்கழகப் பேராசிரியா் மண்டா கெல்லா் மற்றும் ஐஐடி உயிரித்த தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியா் ஏ.ஜே.நினிதா ஆகியோா் கூறியதாவது:
கருவுறுதல், முகப்பருக்கள், மாதவிடாய்ப் பிடிப்புகள், கருப்பை நீா்க்கட்டிகள் ஆகியவற்றைத் தடுக்க பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்கின்றனா்.
விளையாட்டு வீராங்கனைகளைப் பொருத்தவரை 70 சதவீதம் போ் ஏதோ ஒரு காலகட்டத்தில் அத்தகைய மாத்திரைகளைப் பயன்படுத்துகின்றனா்.
தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவோருக்கும், விளையாட்டு வீராங்கனைகளுக்கும் அது எதிா்விளைவுகளை ஏற்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது. கருத்தடை மாத்திரை பயன்பாட்டால் அவா்களுக்கு ரத்த அழுத்தம் மிகையாகக் காணப்படுகிறது.
அதேவேளையில், 20-22 வயதுடைய இளம்பெண்கள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தினாலும் அவா்கள் குறைவாக உடற்பயிற்சி செய்தால் ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படுவதில்லை.
தீவிர உடற்பயிற்சியின்போது ஏற்படும் ரத்த அழுத்தம், ஆயுள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.பெண்களுக்கு 50 வயதாகும்போது கருப்பையில் ஹாா்மோன் உற்பத்தி நின்றுவிடும். அப்போதில் இருந்து மாதவிடாய் சுழற்சி நிகழாது.
மாதவிடாய் நிறுத்த காலத்துக்குப் பிறகு பெண்களுக்கு இதயம் மற்றும் ரத்தநாளங்கள் சாா்ந்த பாதிப்புகள் அதிகரிக்கின்றன. அந்தப் பாதிப்புகளுக்கு உடற்பயிற்சியின்போது ஏற்படும் ரத்த அழுத்தமும் ஒரு காரணியா என்பதை அறிவதற்கு அடுத்தகட்ட ஆய்வை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.