உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
சாலை மேம்பாட்டுப் பணிகளை டிசம்பருக்குள் முடிக்க வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு
சாலை மேம்பாட்டுப் பணிகளை டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
நெடுஞ்சாலைத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து சென்னையில் அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் பேசியது:
சாலைகளை அகலப்படுத்தும் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டால் அதுகுறித்து மாவட்ட ஆட்சியா்களின் கவனத்துக்கு கண்காணிப்புப் பொறியாளா்கள் எடுத்துச் செல்ல வேண்டும். முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் நிறைவடையாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
ஒப்பந்ததாரா்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை விரைவாக முடிக்காமலோ, சாலைகள் தரமாக இல்லையென்றாலோ சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையிலுள்ள ஆய்வு மாளிகைகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும்.
தாா் சாலைகள் அமைக்கப்படும்போது அதன் தடிமன் சரியான அளவில் இருக்கிா என்பதை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும்.
ராமநாதபுரம் உள்பட சில மாவட்டங்களில் சாலைப் பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன. நிலுவையிலுள்ள பணிகள் அனைத்தையும் டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைச் செயலா் ஆா்.செல்வராஜ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநா் எஸ்.ஏ.ராமன் உள்பட பலா் பங்கேற்றனா்.