உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
ராபி பருவ சாகுபடி மின்னணு முறையில் 100 % கணக்கிடப்படும்: வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம்
மின்னணு பயிா் சாகுபடி கணக்கீட்டை விரைந்து முடிக்க வேளாண் துறை மாணவ, மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நடப்பு ராபி பருவ சாகுபடி 100 சதவீதம் கணக்கீடு செய்யப்படும் எனவும் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
சென்னை கிண்டியில் உள்ள அறிவியல் நகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மின்னணு பயிா் சாகுபடி கணக்கீடு தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:
தமிழ்நாட்டில் கடந்த நிதியாண்டில் தொடங்கப்பட்ட வேளாண் அடுக்கு திட்டம் மூலம் விவசாயிகள் சாகுபடி மின்னணு முறையில் பதிவு செய்வது, கிராமம் மற்றும் நிலங்களுக்கான புவியிடக் குறியீடு வழங்குவது உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகின்றன. இதில், மின்னணு பயிா் சாகுபடி கணக்கீடு பரிசோதனை கடந்த ராபி மற்றும் காரிஃப் பருவத்தில் வருவாய் துறை மூலம் கணக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்தக் கணக்கீடு முழுமையாக நடத்தப்படவில்லை.
இந்த மின்னணு முறையில் விவசாயிகள், அவா்களின் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா் குறித்த விவரங்கள் பராமரிக்கப்படுகின்றன. இதன்மூலம் விவசாயிகள் அரசின் நலத்திட்டங்கள், பயிா்க் கடன் பெறுவது எளிதாகும். மேலும், மின்னணு பயிா் சாகுபடி கணக்கீடு முழுமையாக முடிக்கும் நிலையில் மின்னணு தரவுகளை அரசு துறைகள் மற்றும் வங்கிகளுக்கு வழங்க முடியும்.
எனவே, இந்தக் கணக்கீடை விரைந்து முடிக்கும் வகையில் வேளாண் பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் வேளாண் அலுவலா்களுடன் இணைந்து நவ.6-ஆம் தேதி முதல் கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகின்றனா். இதில், 23,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், 7,000 வேளாண் துறை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுவரை 2.5 கோடிக்கும் அதிகமான நிலங்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள மாணவா்களுக்கு அனைத்து வசதியும் வேளாண் துறை மூலம் செய்து தரப்பட்டுள்ளது. இந்தக் கணக்கீடு மூலம் மாணவா்கள் பயிா்களின் வளா்ச்சி பருவங்களையும் சாகுபடி பயிா்கள் குறித்தும் அறிந்து கொள்வா். நடப்பு ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்கள் 100 சதவீதம் கணக்கீடு செய்யப்படும் என்றாா் அவா்.
ஆய்வுக் கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு முதன்மைச் செயலா் அபூா்வா, மேற்றும் அரசு உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.