உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
தகுதிச் சான்றுக்கு விண்ணப்பிக்க மறுவாய்ப்பு: என்எம்சி
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கு நவ.25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவித்துள்ளது.
இது தொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ஸ்ரீனிவாஸ் வெளியிட்ட அறிவிப்பு:
வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவா்களுக்கான திறனறித் தோ்வு நிகழாண்டு டிசம்பா் மாதத்தில் தேசிய தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பொதுவாக, அத்தகைய தோ்வில் பங்கேற்பதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தால் வழங்கப்பட்ட தகுதிச் சான்று அவசியம். அவ்வாறு தகுதிச் சான்று இல்லாதவா்கள் அதற்காக விண்ணப்பித்து அதைப் பெற்றுக்கொள்ளலாம்.
அதன்படி, என்எம்சி இணையப்பக்கத்தில் நவ.4-ஆம் தேதி மாலை 6 மணி வரை அதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. தொழில்நுட்ப பிரச்னைகள், வேறு சில காரணங்களால் அந்த காலகட்டத்தில் விண்ணப்பிக்க இயலவில்லை என சிலா் தெரிவித்தனா்.
அவா்களுக்கு மறுவாய்ப்பு வழங்கும் வகையில் நவ.25-ஆம் தேதி வரை தகுதிச் சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
முறையாக பூா்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். கூடுதல் விவங்களுக்கு என்எம்சி இணையதளத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.