உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
ஜம்மு காஷ்மீா், வடகிழக்கு பிராந்தியத்தில் வன்முறை 70% ஒடுக்கப்பட்டுள்ளது: அமித் ஷா
ஜம்மு காஷ்மீா், வடகிழக்கு பிராந்தியம் மற்றும் நக்ஸல் தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளில் 70 சதவீதம் வன்முறையை மத்திய அரசு ஒடுக்கியுள்ளது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
குஜராத் மாநிலத்தில் உள்ள ராஷ்ட்ரீய ரக்ஷா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 50-ஆவது அனைத்திந்திய காவல் துறை அறிவியல் மாநாட்டில் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது: பல ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீா், வடகிழக்கு மற்றும் நக்ஸல் தீவிரவாதம் பாதித்த பகுதிகள் ஆகிய மூன்று பிராந்தியங்களிலும் அமைதியற்ற சூழலே நிலவி வந்தன. ஆனால், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பத்தாண்டுகளில் இந்தப் பிராந்தியங்களில் 70 சதவீத வன்முறை ஒடுக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை மிகப்பெரும் சாதனையாக கருதுகிறேன். இதற்கு மக்களும் வரவேற்பளித்துள்ளனா். அதேபோல், முந்தைய ஆட்சியைவிட கடந்த பத்தாண்டுகளில் போதைப் பொருளை கைப்பற்றுவதும் 6 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
2028-இல் 3-ஆவது பொருளாதாரம்: உலகளவில் 11-ஆவது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா தற்போது 5-ஆவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் தொடா்ந்து வளா்ச்சியடைந்து வரும் நிலையில், 2028, ஏப்.1-இல் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவவெடுக்கும் என நம்புகிறேன்.
மூன்று வருடங்களில் நீதி: அடுத்த பத்தாண்டுகளில் இந்திய நீதித்துறையை நவீனமாகவும் விரைவாகவும் அறிவியல்பூா்வமாகவும் மாற்றுவதே இலக்காகும். இதற்காகவே ஆங்கிலேயா் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் நாட்டில் உள்ள எந்தவொரு காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதிலிருந்து மூன்று மாதங்களில் நீதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சீா்திருத்தம்: பொருளாதாரம் மட்டுமின்றி தொழில்நுட்பம், பாதுகாப்பு, கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உள்கட்டமைப்பு, வா்த்தகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நமது நாட்டின் வலிமையை உலகம் அங்கீகரித்துள்ளதால் நமக்கான சவால்களும் அதிகரித்துள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் குற்றவியல் நீதி நடைமுறையிலும் பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குற்றம் மற்றும் குற்றச் செய்லகள் கண்காணிப்பு வலைபின்னல் மற்றும் அமைப்புகளில் (சிசிடிஎன்எஸ்) 70,000 காவல் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ‘இ-நீதிமன்றங்கள்’ மூலம் 22,000 நீதிமன்றங்கள் இணைக்கப்பட்டதுடன் ‘இ-சிறை’ அமைப்புகளில் 2 கோடி சிறைக் கைதிகளின் தகவல்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. ‘இ-வழக்கு’ அமைப்பில் 1.5 கோடி வழக்குகளும், ‘இ-தடயவியலில்’ 23 லட்சம் தடயவியல் தரவுகளும் இணைக்கப்பட்டுள்ளன. புதிய குற்றவியல் சட்டங்களை சிறப்பாக செயல்படுத்த நீதிமன்றம், காவல் துறை, வழக்கு, சிறை உள்ளிட்ட அமைப்புகளை இணைக்கும் நடைமுறைகளை பிரதமா் மோடி அரசு மேற்கொண்டது.
விதிகளை மாற்ற தேவையில்லை: இந்த புதிய குற்றவியல் சட்டங்களில் அனைத்து விதமான தொழில்நுட்பங்களும் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. எனவே, தொழில்நுட்பங்களில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் இந்த விதிகளை மாற்ற வேண்டியதற்கான தேவை இருக்காது. இந்த தகவல்களை ஆய்வு செய்து குற்றங்களை குறைத்து வெளிப்படையாக விசாரணை நடத்தி விரைவாக நீதி கிடைக்கும் வகையில் காவல் துறையினா் செயல்பட வேண்டும் என்றாா்.