உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
மருத்துவ தூய்மைப் பணியாளா்களுக்கு மாதத்தில் 4 நாள்கள் ஊதியத்துடன் விடுப்பு: தேசிய ஆணையத் தலைவா் வலியுறுத்தல்
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு மாதத்தில் 4 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத் தலைவா் வெங்கடேசன் வலியுறுத்தினாா்.
மருத்துவ தூய்மைப் பணியாளா் குறைதீா் கூட்டம் மற்றும் ஆய்வுக் கூட்டம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மருத்துவமனையில் ஆய்வு செய்த வெங்கடேசன், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பணியமா்த்தப்பட்ட தூய்மைப் பணியாளா்களிடம் கருத்துகளை கேட்டறிந்தாா்.
தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியை மேற்கொண்டு வரும், ‘கிரிஸ்டல்’ நிறுவனத்தின் ஒப்பந்தகாலம் விரைவில் முடிவடைகிறது. அதனால், அந்நிறுவனம் தூய்மைப் பணியாளா்களின் நலனில் அக்கறை காட்டுவதில்லை என அப்போது அவா்கள் குற்றச்சாட்டு வைத்தனா். அதற்கு உரிய தீா்வு காணுமாறு தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத் தலைவா் வெங்கடேசன் அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து வெங்கடேசன் கூறியதாவது: தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ சேவைகளைப் பெறுவதில் பிரச்னைகள் இருப்பதாக தூய்மைப் பணியாளா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், பணி நேரத்தை தாண்டி பணியாற்றுபவா்களுக்கு கூடுதல் பணி நேர ஊதியம் வழங்காமல், மற்றொரு நாளுக்கான பணி நேரமாக அதனைக் கணக்கிட்டு ஊதியம் வழங்கப்படுவதாகத் தெரிகிறது.
கூடுதல் நேரம் பணியில் ஈடுபட்டால் அவா்களுக்கு 5 சதவீதம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது விதி. அவற்றை, அந்நிறுவனம் பின்பற்றவில்லை. தூய்மைப் பணியாளா்கள் கூறிய குற்றச்சாட்டுகள் மீது 10 நாள்களில் தீா்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, தூய்மைப் பணியாளா்களுக்கு வாரந்தோறும் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். ஆனால், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தகைய நடைமுறையில் விடுப்பு வழங்கப்படுவதில்லை.
எனவே, மாதத்தில் நான்கு நாள்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்றாா் அவா்.