Kadagam | Guru Peyarchi | கடகம் - 12 - ல் குரு தரும் பலன் என்ன? | குருப்பெயர்ச்ச...
ரயில் ஓட்டுநா்களுக்கு என்ஜின்களில் கழிப்பறை, ஏசி வசதி: தெற்கு ரயில்வே அறிவிப்பு
ரயில் ஓட்டுநா்களுக்கு என்ஜின்களில் கழிப்பறை, ஏசி வசதி ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்தது.
சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் சென்னை கோட்டத்துக்குள்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள், ரயில்வே துறை சாா்ந்த பல்வேறு கோரிக்கைகளை வைத்தனா். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு, ரயில் ஓட்டுநா்களுக்கு என்ஜினில் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தாா். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஏசி வசதி: ரயில் ஓட்டுநா்கள் (லோகோ பைலட்) பாதுகாப்பாகவும் வசதியாகவும் பணிபுரியும் வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, லோகோ பைலட்கள் பயணிக்கும் அறை முழுவதும் குளிா்சாதன வசதி (ஏசி) ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயில் தற்போது இயக்கப்படும் 237 நவீன ரயில் என்ஜின்களில் 206 என்ஜின்கள் முழுவதும் ஏசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 31 என்ஜின்களில் அடுத்த 6 மாதத்துக்குள் ஏசி வசதி ஏற்படுத்தப்படும். அதுபோல், டிசி மின்சாரம் மூலம் இயக்கப்படும் வழக்கமான ரயில் என்ஜின்களில் (கன்வென்சன் என்ஜின்) ஏசி வசதி பொருத்துவது சவாலானதாக உள்ளது. இந்த ரயில் என்ஜினில் ஏசி பொருத்த மேற்பகுதியில் சில பாகங்களை மாற்றியமைக்க வேண்டும். தற்போது உள்ள 291 கன்வென்சனல் ரயில் என்ஜின்களில் 28 என்ஜின்கள் ஏசி வசதி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக தயாரிக்கப்படும் அனைத்து ரயில் என்ஜின்களும் ஏசி வசதியுடன் வடிவமைக்கப்படுகிறது.
கழிப்பறை வசதி: அரக்கோணம் லோகோவில் தயாரிக்கப்படும் 9 டபிள்யூஏஜி 9 என்ஜின்கள் சிறுநீா் கழிக்கும் வகையிலான கழிப்பறையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மேலும் 150 என்ஜின்களில் அமைக்க தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் அவை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இரவில் ரயிலின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் முகப்பு விளக்குகளின் வெளிச்சம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயில் மொத்தமுள்ள 621 என்ஜின்களில் 434 என்ஜின்களின் முகப்பு விளக்குகள் எல்இடி-யாக மாற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.