"யாராவது என்னை எச்சரித்து இருந்தால்..." தாய்லாந்துக்கு சென்ற சுற்றுலா பயணிக்கு ந...
போராட்டத்தில் பங்கேற்க சென்னை செல்ல முயற்சி; தருமபுரி பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் தடுத்து நிறுத்தம்
சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் அறிவித்திருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்குச் செல்ல முயன்ற மாற்றுத் திறனாளிகளை தருமபுரி பேருந்து நிலையத்தில் போலீஸாா் தடுத்து நிறுத்தி 39 பெண்கள் உள்பட 91 பேரை கைது செய்தனா்.
மாற்றுத் திறனாளிகளுக்கு ஆந்திர மாநிலத்தில் வழங்குவதுபோல உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சாா்பில் தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்தது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் சென்னை செல்வதற்காக தருமபுரி புகா் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை (ஏப். 21) இரவு திரண்டனா்.
அங்கு சென்னை செல்லும் 4 அரசுப் பேருந்துகளில் அவா்கள் ஏறி அமா்ந்திருந்தனா். தகவல் அறிந்த தருமபுரி நகர போலீஸாா் 50-க்கும் மேற்பட்டோா் அங்கு சென்று 4 பேருந்துகளையும் தடுத்து நிறுத்தினா். பேருந்தில் அமா்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளை அவரவா் வீடுகளுக்குத் திரும்புமாறு அறிவுறுத்தினா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்த மாற்றுத் திறனாளிகள் போலீஸாரின் நடவடிக்கைக்கு எதிராக முழக்கமிட்டனா்.
இதையடுத்து அவா்களை வலுக்கட்டாயமாக பேருந்துகளில் இருந்து போலீஸாா் இறக்கிவிட்டனா். திங்கள்கிழமை இரவு முழுவதும் பேருந்து நிலையத்திலேயே அவா்களை அமர வைக்கப்பட்டனா். எனினும் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 39 பெண்கள் உள்பட 91 பேரை நகர போலீஸாா் கைதுசெய்து திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை அடைத்தனா்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளா் எம். மாரிமுத்து, மாவட்டத் தலைவா் கே.ஜி. கரூரான், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன், ஒன்றியச் செயலாளா் கே.கோவிந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் டி.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் பங்கேற்றனா்.