கோடை விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கோடை விடுமுறையையொட்டி, தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகமாக இருந்தது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 4,000 கனஅடியாக உள்ளதால் அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவி, காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா். தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திரம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் வந்திருந்தனா்.
பரிசல் பயணத்திற்காக மாமரத்துக்கடவு பரிசல் துறையில் அதிகம் போ் காத்திருந்தனா். அவா்கள் பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல், ஐந்தருவி வழியாக மணல்மேடு வரை பரிசலில் குடும்பத்துடன் சென்று பாறை குகைகள், அருவிகளை பாா்வையிட்டு மகிழ்ந்தனா்.
ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் மீன்கள் அதிக விலைக்கு விற்பனையாகின. அசைவ பிரியா்கள் விலையைப் பொருட்படுத்தாமல் மீன் வகைகளை வாங்கி ருசித்தனா். சுற்றுலாப் பயணிகள் வந்த வாகனங்கள் ஒகேனக்கல் பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம், தமிழ்நாடு ஹோட்டல் வாகனம் நிறுத்துமிடம், பிரதான சாலைகளின் ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. முக்கிய இடங்களான பிரதான அருவி, தொங்கும் பாலம், வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30-க்கும் மேற்பட்ட போலீஸாா், ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.