சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு...
காஷ்மீர் தாக்குதல்: `இந்தியா உடன் துணை நிற்கிறோம்' - இந்தியா உடன் கைக்கோர்க்கும் உலக நாடுகள்
நேற்று தெற்கு காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் கிட்டதட்ட 28 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உலக நாடுகள் இந்தியா உடன் கைக்கோர்த்துள்ளது.
அமெரிக்காவின் ஆறுதல்
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "காஷ்மீர் சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா இந்தியா உடன் உறுதியாக நிற்கிறது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் பிராத்தனை செய்கிறோம். பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு எங்களுடைய முழு ஆதரவும், ஆழந்த அனுதாபங்களும்" என்று தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்தியாவில் இருக்கும் அமெரிக்காவின் துணை அதிபர் ஜெ.டி வான்ஸ், "நானும், என்னுடைய மனைவி உஷாவும் இந்தத் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். கடந்த சில தினங்களாக, இந்த நாட்டின் அழகு குறித்தும், மக்கள் குறித்தும் வியந்துள்ளோம். எங்களுடைய எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உங்களுடன் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
'எங்களுடைய ஆதரவை மேலும் அதிகரிக்கிறோம்' - ரஷ்யா
ரஷ்ய அதிபர் புதின், "இந்த கொடூரமான குற்றத்திற்கு எந்த நியாயமும் கிடையாது. இந்த குற்றத்தின் பின்னணியில் இருப்பவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்" என்று கூறியுள்ளார்.
அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "அனைத்து விதங்களிலும் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு இந்தியாவுடனான எங்களுடைய ஒத்துழைப்பை மேலும் அதிகப்படுத்துகிறோம். எங்களுடைய அனுதாபங்களையும், ஆதரவையும் இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தெரிவியுங்கள். மேலும், காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் எங்களுடைய வாழ்த்தையும் தெரிவியுங்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
'எந்தவித ஆதரவையும் தருவோம்' - சவுதி அரேபியா
அரசு பயணத்திற்காக பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றிருந்தார். இந்தத் தாக்குதலினால் தற்போது பாதியிலேயே திரும்பியுள்ளார்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்த சம்பவம் குறித்து, "சவுதி அரேபியா இந்தியாவிற்கு துணை நிற்கிறது. இந்தத் துயர நேரத்தில் இந்தியாவிற்கு தேவையான எந்தவித ஆதரவையும் சவுதி அரேபியா கொடுக்கும்" என்று கூறியுள்ளார்.
'ஆழ்ந்த வருத்தங்கள்' - இஸ்ரேல்
இஸ்ரேலின் வெளியுறவு துறை அமைச்சர் கிதியோன் சார், "ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த சுற்றுலா பயணிகள் மீதான கொடூர தாக்குதலால் ஆழந்த வருத்தமடைந்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் எங்கள் எண்ணங்கள் உள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான சண்டையில் இந்தியா உடன் இஸ்ரேல் துணை நிற்கும்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
'ஆழந்த இரங்கல்கள்' - இத்தாலி
இத்தாலியின் பிரதமர் மெலோனி, "இந்தியாவில் நடந்துள்ள தீவிரவாத தாக்குதலால் ஆழ்ந்த வருத்தமடைந்துள்ளேன். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர், இந்திய அரசு, அனைத்து இந்திய மக்கள்களுக்கும் இத்தாலி ஆழந்த இரங்கலை தெரிவிக்கிறது" என்று எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.

'வன்மையான கண்டனங்கள்' - இலங்கை
இலங்கை அரசு, "பகல்காமில் நடந்துள்ள கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு வன்மையான கண்டனங்கள். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நெஞ்சார்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். இந்தியாவுடன் இலங்கை துணை நிற்கிறது. பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்று கூறியுள்ளது.
'இந்திய மக்களுக்கு...'- இத்தாலி
"இந்திய அரசு, இந்திய மக்கள், குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கிறோம். இந்தத் தாக்குதலில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்." என்று இத்தாலி அரசு கூறியுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
