'நான் முதல்வன்' திட்டத்தால் யுபிஎஸ்சி தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி! - உதயநித...
Elephant: ``சுற்றுலா பயணிகளின் அத்துமீறலால் பரிதாபமாக உயிரிழந்த பெண்..'' - வனத்துறை சொல்வதென்ன?
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியைச் சேர்ந்தவர் சுமார் 55 வயதான சரசு. தபால்துறையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த இவர் தன்னுடைய கணவருடன் நேற்று முன்தினம் மாலை பொக்காபுரம் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென சாலையில் தென்பட்ட யானை ஒன்று ஸ்கூட்டரை தள்ளிவிட்டு தாக்கியதில் சரசுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

கணவர் குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார். காயத்துடன் தவித்த சரசுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சரசு அன்றைய தினம் இரவு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சோகம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் அத்துமீறலால் தான் இந்த துயரம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ள முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள், "முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட மசினகுடி, பொக்காபுரம் ஆகிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் என்பது இயல்பான ஒன்றுதான்.
உள்ளூர் மக்களைப் பொறுத்தவரை பாதுகாப்பான முறையிலேயே பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதேப்போன்று தான் அன்றைய தினம் மாலையும் பொக்காபுரம் சாலையில் யானை நடமாட்டம் இருந்துள்ளது.
யானயைக் கண்ட சுற்றுலா பயணிகள் சிலர் வாகனங்களை சாலையின் நடுவில் நிறுத்தி செல்போனில் படம் பிடித்திருக்கிறார்கள். ஒருவரைப் பார்த்து மற்றொருவர் என அந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோபமடைந்த யானை வாகனங்களை விரட்டி ஆரம்பிக்க, சரசின் ஸ்கூட்டரை விரட்டியிருக்கிறது. போக்குவரத்து நெரிசலை மீறி அங்கிருந்து ஸ்கூட்டரில் தப்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட, எட்டிப்பிடித்து ஸ்கூட்டரை தாக்கியிருக்கிறது. வாகனங்களை நிறுத்த வேண்டாம் என அறிவிப்பு பதாகைகள் வைத்தும் அபராதம் விதித்தும் வருகிறோம்.
சில சுற்றுலா பயணிகள் எதையும் மதிப்பதில்லை. சுற்றுலா பயணிகளின் இந்த அத்துமீறலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் சரசு. வனப்பகுதிகளின் ஊடாக பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் " என்றனர்.