ஜம்மு - காஷ்மீரில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற கூடுதல் விமானங்கள்!
ஜம்மு - காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழலைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் வெளியேறுவதற்கு வசதியாக கூடுதலாக 4 விமானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த கொடூரத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஜம்மு - காஷ்மீர் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும், பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதால் அசாதாரண சூழல் நிலவுகிறது.
இதனிடையே, கோடை விடுமுறைக்காக ஜம்மு - காஷ்மீருக்கு அதிகளவிலானோர் சுற்றுலா சென்றிருக்கும் நிலையில், அவர்கள் பதற்றமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேறுவதற்கு வசதியாக ஸ்ரீநகரில் இருந்து மும்பை மற்றும் தில்லிக்கு தலா 2 விமானங்கள் இன்று இயக்கப்படும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும், விமானங்களின் கட்டணம் உயர்வதை தடுக்க கண்காணிப்புப் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாகவும், தேவைக்கேற்ப கூடுதல் விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.