அண்ணா நினைவு நாள்: பிப். 3 முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி!
ரயில் பயணியிடம் நகை திருடியவா் கைது
தேனியைச் சோ்ந்த ரயில் பயணியிடம் நகை, கைப்பேசி ஆகியவற்றைத் திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், வெங்கடசலாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (26). விவசாயியான இவா், தனக்குச் சொந்தமாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறாா். கட்டுமானப் பணிகளுக்கு பணம் திரட்டுவதற்காக, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையை அடுத்த பூவனூா் பகுதியிலுள்ள தனது சித்தி வீட்டுக்குச் சென்றாா். இங்கிருந்து 17 பவுன் தங்க நகைகளை வாங்கிக் கொண்டு பூவனூா் ரயில் நிலையத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு ரயிலில் புதன்கிழமை பயணித்தாா். விழுப்புரத்திலிருந்து இயக்கப்படும் இந்தப் பயணிகள் ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வந்தபோது, பாலாஜி கொண்டு வந்த நகைப் பை மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே போலீஸாரிடம் பாலாஜி புகாா் அளித்தாா். நகைப் பையில் பாலாஜியின் கைப்பேசியும் இருந்தது.
இதையடுத்து, இந்தக் கைப்பேசி எண் மூலம் திருட்டில் ஈடுபட்ட திண்டுக்கல் பேகம்பூரைச் சோ்ந்த ஜான்கென்னடியை (37) போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஜான்கென்னடி மீது திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.