Vikatan Weekly Quiz: விவாதப்பொருளான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு டு ஐபிஎல்; இந்த...
ராஜபாளையம்: 'குடும்ப தகராறில் கணவன் அடித்துக் கொலை'- தற்கொலை நாடகமாடிய தாய்-மகள் கைது!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே குடும்பத் தகராறில் கணவனை அடித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய சம்பவத்தில் தாய்-மகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "ராஜபாளையம் அருகே மேலப்பாட்டு கரிசல்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எம்.பி.கே.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55), பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ஈஸ்வரி எனும் மனைவியும், ராஜேஸ்வரி, தெய்வானை என இரண்டு பெண் பிள்ளைகளும் உண்டு. இதில் ராஜலட்சுமிக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகளுடன் ராஜபாளையம் அடுத்த ஒத்தப்பட்டியில் குடும்பத்துடன் வசித்துவருகிறார்.
இதுபோல, தெய்வானைக்கும் திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சிவகாசி அருகே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தெய்வானைக்கும்- அவரின் கணவருக்கும் குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் குடும்ப பெரியவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து ஆதரவுக்காக, எம்.பி.கே. புதுப்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு அருகிலேயே தனியே ஒரு வீட்டுக்கு தெய்வானை தனது குடும்பத்தினருடன் குடிவந்துள்ளார். இதனையடுத்தும் கணவன்-மனைவி இடையே மீண்டும் பிரச்னை தொடர்ந்துள்ளது. ஒருசமயம் வீட்டுக்குள் சண்டை பெரிதாகவே, மாமியார் ஈஸ்வரி மற்றும் மனைவி தெய்வானை ஆகியோர் சேர்ந்து கார்த்திக்கை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த தெய்வானையின் கணவர் வீட்டைவிட்டு வெளியேறி சென்றுவிட்டார். இதையடுத்து தெய்வானையும் அவரின் இரண்டு குழந்தைகள் மட்டுமே கடந்த சில மாதங்களாக அந்த வீட்டில் தனியே வசித்து வந்துள்ளனர். குடும்ப பிரச்னைகளை உன்னிப்பாக கவனித்துவந்த சுப்பிரமணி, மகள் தெய்வானையை கணவருடன் சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறியுள்ளார்.
அப்போது, 'எந்த பிரச்னைக்கும் சண்டை தீர்வாகாது. நீயும், உன் அம்மாவும் சேர்ந்து உனது கணவரை அடித்து விரட்டியது தவறு. ஆகவே, நடந்த தவறுக்கு உனது கணவரிடம் மன்னிப்புக்கேள். குடும்ப பாதுகாப்புக்கும், குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் கணவர் முக்கியம் ஆகவே உனது கணவரை சமாதானப்படுத்தி சேர்ந்து வாழ்' என மகள் தெய்வானைக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதைகேட்டு கோபமடைந்த ஈஸ்வரி, தனது கணவர் சுப்பிரமணியோடு சண்டையிட்டுள்ளார். இந்த குடும்ப சண்டை நேற்று இரவு பெரிதானது. கணவன்-மனைவி சண்டை பயங்கர சத்தத்துடன் நடைபெற்றபோதும், வாடிக்கையாக நடக்கும் அதே சண்டைதான் என்ற நினைப்பில் அக்கம் பக்கத்தினர் யாரும் சமாதானப்படுத்த வரவில்லை எனக் கூறப்படுகிறது. அமளிதுமளியான வீடு, அடுத்த சில மணிநேரத்தில் எதுவும் நடக்காததுபோன்று அமைதியாகியுள்ளது. இந்தநிலையில் திடீரென ஈஸ்வரி கதறி அழுதுள்ளார்.
குடும்ப பிரச்னையில் மனவலி தாங்காமல் தனது கணவன் சுப்பிரமணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அழுது புரண்டுள்ளார். அவரோடு சேர்ந்து மகள் தெய்வானையும் கதறி அழுதுள்ளார். இவர்களின் கதறலைக்கேட்டு வீட்டுக்குள் சென்று அக்கம் பக்கத்தினர் பார்க்கையில், சுப்பிரமணி தூக்கில் பிணமாக கிடந்துள்ளார். உடனே இது குறித்த தகவல் போலீஸூக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதன்பேரில் விரைந்துவந்த வன்னியம்பட்டி போலீஸார், சுப்பிரமணியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது, துள்ளிக்குதித்தால் தலை தட்டும் அளவுக்கு சிறிய வீட்டுக்குள் சுப்பிரமணி தனக்குத்தானே தூக்குப்போட்டு கொண்டது போலீஸூக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரின் உடலில் ஆங்காங்கே நகக்கீறல்கள், ரத்தக்காயங்கள் இருப்பதை போலீஸார் கவனித்துள்ளனர்.
தொடர்ந்து சுப்பிரமணி இறந்தது தொடர்பாக குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் குடும்பத்தினர் மீது போலீஸூக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதனையடுத்து, ஈஸ்வரி மற்றும் தெய்வானையிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், சுப்பிரமணியை அடித்துக் கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். தொடர்ந்து கொலையை மறைப்பதற்காக தாயும், மகளும் சேர்ந்து அவரை நடு வீட்டின் மேற்கூரையில் தூக்கில் பிணமாக தொங்கவிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணி கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஈஸ்வரி, தெய்வானை ஆகிய இருவரையும் கைது செய்தனர்" எனக் கூறினர்.