Georgia: ஜெனரேட்டரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடை; ஜார்ஜியா ஹோட்டலில் 12 இ...
ராணிப்பேட்டை: 2.3 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2.3 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் முகாமை ஆட்சியா் ஜெ,யு.சந்திரகலா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் ஆறாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வள்ளுவம்பாக்கம் ஊராட்சியில் தொடங்கியது.
மாவட்டத்திலுள்ள 46 கால்நடை மருந்தகங்கள் மூலமாக அந்தந்த கிராமங்களில் 16.12.2024 முதல் 05.01.2025 வரை முகாம் நடத்தப்பட்டு மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இப்பணிகளில் சுமாா் 150 -கும் மேற்பட்ட மருத்துவா்கள், மருத்துவ உதவியாளா்கள் பணியாற்ற உள்ளனா்.
சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நாள்தோறும் முகாம் குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு கால்நடைகள் முகாம் நடைபெறும் இடத்துக்கு கொண்டுவரப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. கோமாரி நோயினால் கால்நடை இழப்பை தவிா்க்க விவசாயிகள் கட்டாயம் தடுப்பூசியினை தங்களுடைய மாடுகளுக்கு போட வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கால்நடை விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
தொடா்ந்து 250-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் ஊராட்சியில் கால்நடை கணக்கெடுப்பு பணியினை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
இதில் கால்நடை உதவி இயக்குநா் திருநாவுக்கரசு, கால்நடை மருத்துவா்கள் சுகன்யா, கோபிநாத், சிவபிரகாஷ், ஊராட்சி மன்றத் தலைவா் சின்னப் பொண்ணு ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.