ராமாயணம் படத்தில் ஏ.ஆர். ரஹ்மானுடன் இசையமைக்கும் மற்றொரு ஆஸ்கர் நாயகன்!
நிதிஷ் திவாரி இயக்கும் ராமாயணம் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து மற்றொரு ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் இசையமைக்கவுள்ளார்.
'பவால்’, ‘சிச்சோரே’ ஆகிய படங்களை இயக்கிய நிதிஷ் திவாரி, தற்போது ராமாயணம் படத்தை இயக்கிவருகிறார். மிக பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராமராக ரன்பீர் கபூர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாகயஷ் நடிக்கின்றனர்.
இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகல் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகவுள்ளன.
இந்தப் படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் யஷுக்கு ரூ. 200 கோடி சம்பளம் தரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை ரூ. 200 கோடி வாங்கினால், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அதிக சம்பளம் பெற்ற சாதனையை படைப்பார்.
இந்நிலையில், இந்தப் படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து ஆஸ்கர் வென்ற பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியது.
இதுதொடர்பாக, சமீபத்தில் நடைபெற்ற நேர்க்காணல் ஒன்றில் ரஹ்மானிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ரகசியம் என்று மட்டும் பதிலளித்தார். தகவலை மறுக்காததால் இந்திய சினிமாவில் ஹான்ஸ் ஜிம்மர் பணியாற்றப் போவது கிட்டத்திட்ட உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
லயன் கிங் மற்றும் டூனே திரைப்படங்களுக்காக ஆஸ்கர் வென்ற ஹான்ஸ் ஜிம்மர், 12 முறை ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு தேர்வானவர்.