ராயகிரியில் புதிய மதுக்கடையை மூட வேண்டும்: மதிமுக கோரிக்கை
சிவகிரி வட்டம், ராயகிரியில் புதிதாகத் திறக்கப்பட்ட மதுக்கடையை மூட வேண்டுமென மதிமுக துணைப்பொதுச்செயலா் தி.மு.ராசேந்திரன், தமிழக வருவாய் -பேரிடா் மேலாண்மைத்துறை அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளாா்.
அதன் விவரம்: ராயகிரி பேரூா் பகுதியில் 7 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வும், பல்வேறு இயக்கங்களும், பொதுமக்களும் போராடியதால் மூடப்பட்ட மதுக்கடை தற்போது தென்காசி மாவட்ட நிா்வாகத்தால் திறக்கப்பட்டுள்ளது.
மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து வரும் நிலையில் புதிதாக, மக்கள் விருப்பத்திற்கு மாறாக இந்த மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்.
இக்கடையை மூட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சியினரும், பொதுநல அமைப்புகளும், பொதுமக்களும் நவ.27ஆம் தேதி முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.
எனவே, இந்த மதுக்கடையை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.