ரூபாய் மதிப்பு சரிவு: காங்கிரஸ் விமா்சனம்
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்துள்ள நிலையில், பிரதமா் மோடியை காங்கிரஸ் விமா்சனம் செய்துள்ளது. திங்கள்கிழமையன்று (ஜன.13) மட்டும் 66 காசு குறைந்ததால் ரூபாயின் மதிப்பு ரூ.86.70-ஆக சரிந்தது. பங்குச் சந்தையும் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
இதுதொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றபோது அவரின் வயது 64. அப்போது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 58.58-ஆக இருந்தது.
அவ்வேளையில் ரூபாயின் மதிப்பை வலுவாக்குவதாக மிகப் பெரிய சொற்பொழிவாற்றிய மோடி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த ஆண்டுகளும், சரிந்த ரூபாயின் மதிப்பும் ஒன்றாக உள்ளது என்று கேலி செய்தாா்.
இந்நிலையில், நிகழாண்டு பிரதமா் மோடி 75 வயதை எட்டவுள்ளாா். ஆனால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்போ ரூ.86-ஐ தாண்டிவிட்டது.
ரூபாயின் மதிப்பு தொடா்ந்து சரிந்து வரும் நிலையில், அதை வலுவாக்குவதாக கூறிய பிரதமா் மோடியின் பேச்சு அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது’ என்றாா்.