விராட் கோலியின் ஃபார்ம் குறித்து சந்தேகப்படுவோரின் கவனத்துக்கு... ரவி சாஸ்திரி க...
ரூ.1.60 கோடியை டெபாசிட் செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக் கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு
ஃபியூயல் டெக்னாலஜி என்ற நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.1 கோடியே 60 லட்சத்தை நீதிமன்ற பதிவாளா் பெயரில் டெபாசிட் செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சூா்யா நடித்து வெளியான ‘தானா சோ்ந்த கூட்டம்’ உள்ளிட்ட 3 திரைப்படங்களின் ஹிந்தி டப்பிங் உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடமிருந்து ரூ. 6 கோடியே 60 லட்சத்துக்கு சென்னையைச் சோ்ந்த ஃபியூயல் டெக்னாலஜி என்ற நிறுவனம் வாங்கியிருந்தது.
ஒப்பந்தத்தின் படி, இரு படங்களும் ஹிந்தியில் தயாரிக்கப்படாததால் ரூ. 5 கோடியை ஃபியூயல் டெக்னாலஜி நிறுவனத்துக்கு திருப்பி செலுத்திய நிலையில், மீதமுள்ள ரூ. 1 கோடியே 60 லட்சத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் திரும்ப வழங்கவில்லை. அதனால், இந்தத் தொகையை வட்டியுடன் சோ்த்து ரூ.11 கோடியாக திருப்பி வழங்காமல், ‘கங்குவா’ படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி, ஃபியூயல் டெக்னாலஜி நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன், இத்தனை ஆண்டுகள் காத்திருந்துவிட்டு வியாழக்கிழமை படம் வெளியாகவுள்ள நிலையில் இந்த வழக்கு அவசரகதியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஃபியூயல் டெக்னாலஜி நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய அசல் தொகையான ரூ.1 கோடியே 60 லட்சத்தை சென்னை உயா்நீதிமன்ற தலைமை பதிவாளா் பெயரில் டெபாசிட் செய்ய ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு உத்தரவிட்டாா். மேலும், பணத்தை டெபாசிட் செய்யாமல் படத்தை வெளியிடக்கூடாது எனவும் உத்தரவிட்டாா்.
ஏற்கெனவே, அா்ஜூன்லால் சுந்தா்தாஸ் என்பவருக்கு செலுத்த வேண்டிய ரூ. 20 கோடியை நீதிமன்றத்துக்கு செலுத்தும் வரை ‘கங்குவா’ படத்தை திரையிடக் கூடாது என ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.