ரூ. 10 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ கஞ்சா அழிப்பு
மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ கஞ்சாவை திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே உள்ள தனியாா் எரியூட்டு நிறுவனத்தில் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் வியாழக்கிழமை அழிக்கப்பட்டது.
கடந்த இரு நாள்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான வழக்குகள் மூலம் கைப்பற்றப்பட்ட 975 கிலோ கஞ்சா மூட்டைகள், நான்குனேரி அருகே பொத்தையடி கிராமத்தில் உள்ள பயோமெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் எரியூட்டி அழிக்கப்பட்டது.
இந்த நிலையில், விருதுநகா், திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ கஞ்சா மூட்டைகளை மதுரை சரக டி.ஐ.ஜி அபிநவ் குமாா் , திருநெல்வேலி டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி, மதுரை காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் ஆகியோா் முன்னிலையில் இதே எரியூட்டு நிறுவனத்தில் எரியூட்டி அழிக்கப்பட்டது. கடந்த 3 நாள்களில் மட்டும் ரூ. 15 கோடி மதிப்பிலான 3 ஆயிரம் கிலோ கஞ்சா எரியூட்டி அழிக்கப்பட்டன.