ரூ.2 கோடியில் பள்ளிக் கட்டடங்கள் திறப்பு
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ரூ.2.07 கோடியில் புதிய பள்ளிக் கட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
நாட்டறம்பள்ளி ஒன்றிம், நல்லகிந்தணப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளியில் 2 புதிய வகுப்பறைகள், ராமநாயக்கண்பேட்டை அரசு தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறைகள், உதயேந்திரம் பேரூராட்சி தொடக்கப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஆலங்காயம் ஒன்றியம் சிந்தகமணிபெண்டா நடுநிலைப்பள்ளியில் 4 வகுப்பறைகள் ஆகியவை குழந்தைநேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மொத்தமாக ரூ.2.07 கோடியில் கட்டப்பட்டன.
நல்லகிந்தணப்பள்ளி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் க.தா்ப்பகராஜ், ஜோலாா்பேட்டை எம்எல்ஏ .க.தேவராஜி ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினா். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா், ஒன்றியக்குழு தலைவா் வெணமதி, மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதே போல் உதயேந்திரம் பேரூராட்சியில் தொடக்க பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் பூசாராணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், பேரூா் திமுக செயலாளா் ஆ.செல்வராஜ் ஆகியோா் மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினா்.