ரூ.4 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை; உடந்தையாக இருந்த தாய்.. 5 பேர் கைது - ஈரோட்டில் நடந்தது என்ன?
ஈரோட்டில் பிறந்து 50 நாள்களே ஆன பெண் குழந்தை ரூ.4 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பணத்தைப் பங்கு போடுவதில் குழந்தையின் தாய்க்கும் மற்றவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் விவகாரம் வெளியே வந்துள்ளது. பிறந்து 50 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை விற்பனை செய்யப்பட்டது ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். "தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நித்யா (28). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டுக்கு வந்த நித்யா, பேருந்து நிலையம் அருகே தங்கி வேலை செய்து வந்துள்ளார். அப்போது, சந்தோஷ்குமார் என்பவருடன் நித்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சந்தோஷ்குமார் மூலம் ஈரோட்டில் பாலியல் தொழில் இடைத்தரகரான செல்வி என்பவரின் அறிமுகம் நித்யாவுக்கு கிடைத்துள்ளது. சந்தோஷ்குமாரும், நித்யாவும் நெருங்கிப் பழகி வந்த நிலையில் நித்யா கர்ப்பம் அடைந்துள்ளார்.
தான் கர்ப்பம் அடைந்ததை செல்வியிடம் நித்யா தெரிவித்துள்ளார். இதையடுத்து, கர்ப்பத்தை கலைக்க ஈரோட்டில் உள்ள பல தனியார் மருத்துவமனைகளை செல்வியின் உதவியுடன் நித்யா அணுகியுள்ளார். ஆனால், போதிய ஆவணங்கள் இல்லாததால் நித்யாவின் கருவைக் கலைக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், குழந்தை பிறந்தால் அதை நல்ல விலைக்கு விற்றுவிடலாம் என சந்தோஷ்குமாரும், செல்வியும் நித்யாவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். இதற்கு நித்யா சம்மதம் தெரிவித்து கருவைக் கலைக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் ஈரோடு அரசு மருத்துவமனையில் நித்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, குழந்தையை விற்கும் முயற்சியில் சந்தோஷ்குமார், செல்வி மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த பாலியல் தரகர்களான ராதாமணி,பானு,ரேவதி ஆகியோர் டீமாக இணைந்து செயல்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத நாகர்கோவிலைச் சேர்ந்த தம்பதியை தொடர்பு கொண்டுள்ளனர். குழந்தைக்கு ரூ.10 லட்சம் வரை பேரம் பேசி உள்ளனர். இறுதியாக ரூ.4 லட்சத்துக்கு குழந்தையை தீபாவளிக்கு முந்தைய நாள் நாகர்கோவிலைச் சேர்ந்த தம்பதியிடம் விற்பனை செய்துள்ளனர். அந்த தொகையை 6 பேரும் பங்கு போட்ட நிலையில், தனக்கு கூடுதலாக பணம் வேண்டுமென குழந்தையின் தாய் நித்யா கூறியுள்ளார். அதில், சந்தோஷ்குமார், செல்வி மற்றும் நித்யாவுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த நித்யா தனக்கு பிரசவம் பார்த்த ஈரோடு அரசு மருத்துவமனை செவிலியரிடம் குழந்தையை விற்பனை செய்த விவரத்தை கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியான செவிலியர், மாவட்ட குழந்தைகள் நலப் பிரிவுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குழந்தைகள் நல அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் ஈரோடு வடக்கு போலீஸார் நித்யாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதியானதால் சந்தோஷ்குமார், இடைத்தரகர்களான செல்வி, ராதாமணி,பானு,ரேவதி ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். குழந்தை மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தாய் நித்யாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்றனர்.
இதுதொடர்பாக விசாரணை அதிகாரியான ஈரோடு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்பிரபுவிடம் பேசினோம். "குழந்தையை விற்பனை செய்தது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையின் தாய் நித்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என நித்யாவிடம் விசாரித்து வருகிறோம். குழந்தையை ரூ.4 லட்சம் கொடுத்து வாங்கிய நாகர்கோவில் தம்பதியிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். முழுமையான விசாரணை முடிந்த பிறகு தான் குழந்தை விற்பனை செய்த விவகாரத்தில் மேலும் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என தெரியவரும்" என்றார்.