ரெப்போ விகிதம் 0.25% குறைப்பு! சாதகமும் பாதகமும்!
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் கடன் தவணை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுவின், புதிய ரெப்போ வட்டி விகிதத்தை முடிவு செய்வதற்கான கூட்டம், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட சஞ்சய் மல்ஹோத்ராவின் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 % குறைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரெப்போ விகிதம் 6.50 சதவீதத்திலிருநது 6.25 சதவீதமாகக் குறைந்துள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பினை வெளியிட்டார்.
ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதம் முதல் முறையாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தனிநபர் கடன், வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும், மாதாமாதம் செலுத்தும் தவணைத் தொகையில் ஒரு கணிசமான தொகை குறையும். இதன் மூலம் மக்கள் கையில் கொஞ்சம் பணமிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உதாரணத்துக்கு வீட்டுக் கடனாக ரூ.30 லட்சத்தை 20 ஆண்டுகளில் செலுத்தும் வகையில் 9 சதவீத வட்டிக்கு கடன் பெற்றவர் மாத தவணையாக ரூ.27,000 செலுத்துவார் என்றால், இனி வட்டி 8.75 சதவீதமாக மாறினால் ரூ.26,550 ஆக மாதத் தவணை குறையலாம் என்று கணக்கிடப்படுகிறது. மாதத் தவணை அதிகமாக இருக்கும்போது, மிச்சமாகும் தொகை அதிகமாக இருக்கும்.
(நடப்பு 2024-25ஆம் நிதியாண்டில், அக்டோபரில் இருந்து இந்தியப் பொருளாதாரம் தொடர்பான கவலை அதிகரித்து வருகிறது. இந்தக் காலக்கட்டத்தில், அமெரிக்க டாலர் மற்றும் பிற முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறையத் தொடங்கியது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை உயர்ந்தது. )
புதிய நிதியாண்டு தொடக்கத்திலிருந்தே மந்த நிலை தொடங்கியது. எனவே புதிய சூழ்நிலை மிகவும் சிக்கலானது. விலைவாசி உயர்வுக்கு மத்தியில், வளர்ச்சியை எப்படி உயர்த்துவது?
எனவே, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்திருக்கிறது.
இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை நிதிக் கொள்கைக் குழு கவனத்தில் கொண்டுள்ளது என்றார். (தேவையெனில் இந்தப் பாராவை வைத்துக்கொள்ளலாம்.)
இதன் மூலம் என்ன பயன் என்றால், வங்கிகள் மக்களுக்கு அளிக்கும் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறையும். ஏற்கனவே கடன் பெற்று இஎம்ஐ செலுத்தி வரும் மக்களுக்கு மாதத் தவணை தொகை குறையும். மக்களிடம் சற்று பணம் இருக்கும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு இப்படியிருக்க பொருளாதார நிபுணர்களோ, அமெரிக்கா போன்ற நாடுகளில் வட்டி விகிதம் குறைக்கப்படாமல், இந்தியாவில் ரெப்போ விகிதம் குறைப்பால், ஏற்கனவே சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு குறையலாம் என்றும், பணவீக்கம் காரணமாக நாள்தோறும் உச்சம் தொட்டு வரும் தங்கம் விலை அதிகரிக்கலாம், அவ்வளவு ஏன் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்திக்கும் நிலையும் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கிறார்கள்.