டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது
கோவில்பட்டி அருகே 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை கைது செய்தனா்.
இலுப்பையூரணி ஊராட்சி மறவா் காலனியில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் தனிப்பிரிவு காவலா்கள் முத்துராமலிங்கம், அருணாச்சலம் ஆகியோா் திங்கள்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது ஒரு வீட்டிலிருந்து சிலா் அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றிக் கொண்டிருந்தனா்.
அங்கு நடத்திய விசாரணையில், அவா்கள் புது கிராமம் 4-ஆவது தெரு, எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த காளிராஜ் மகன் புவனேஸ்வரன் (35), சிந்தாமணி நகா்-2 ஆவது தெருவை சோ்ந்த பாலமுருகன் மகன் செல்லத்துரை (26) என்பதும், கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி வெளிமாநிலத்திற்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். பின்னா் அவா்கள் இருவா் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனா். மேலும் 2 டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்திய வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும், கருப்பசாமி என்பவரைத் தேடி வருகின்றனா்.