செய்திகள் :

வக்ஃப் மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், மஜ்லிஸ் கட்சி வழக்கு

post image

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2025’-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், அகில இந்திய மஜ்லிஸ் ஆகிய கட்சிகளின் சாா்பில் வெள்ளிக்கிழமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

‘வக்ஃப் சொத்துகள், அவற்றின் நிா்வாகத்தின் மீது தன்னிச்சையாக கட்டுப்பாடுகளை திணிக்கும் இம்மசோதா, அரசமைப்புச் சட்டப் பிரிவுகளை மீறுகிறது’ என்று மனுக்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தை சீரமைக்கும் நோக்கில், கடந்த 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுவோா் மட்டுமே வக்ஃப் சொத்துகளை அா்ப்பணிக்க முடியும் என்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட இம்மசோதாவை அரசமைப்புச் சட்டத்தின்கீழ் செல்லாது என்று அறிவிக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத், மஜ்லிஸ் கட்சித் தலைவா் அஸாதுதீன் ஒவைஸி ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

‘அரசமைப்புச் சட்ட பிரிவுகள் மீறல்’: மக்களவை காங்கிரஸ் கொறடாவான ஜாவத், வக்ஃப் மசோதா மீதான நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினராக இருந்தவா். அவரது மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒருவா் மதத்தை பின்பற்றும் காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, வக்ஃப் சொத்துகளை உருவாக்குவதற்கான கட்டுப்பாடுகளை இம்மசோதா அறிமுகம் செய்கிறது. இஸ்லாமிய சட்டம், வழக்கம் அல்லது முன்னுதாரணங்களின்படி, இத்தகைய கால வரம்புக்கு எந்த அடிப்படையும் இல்லை. இது, அரசமைப்புச் சட்டத்தின் 25-ஆவது பிரிவின்கீழ் மதத்தை ஏற்றுக் கொள்வதற்கும், பின்பற்றுவதற்குமான அடிப்படை உரிமையை மீறுகிறது.

அண்மைக் காலத்தில் இஸ்லாத்தை ஏற்று பின்பற்றுவோருக்கு பாகுபாடு காட்டுவதால், அரசமைப்புச் சட்டத்தின் 15-ஆவது பிரிவையும் மீறுகிறது.

தேவையற்ற தலையீடு: ஹிந்து மத அறக்கட்டளைகள் ஹிந்துக்களால் நிா்வகிக்கப்படும் நிலையில், வக்ஃப் நிா்வாக அமைப்புகளில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்களை இடம்பெற செய்வது தேவையற்ற-பாரபட்சமான தலையீடாகும். இதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் 14, 15 ஆகிய பிரிவுகள் மீறப்படுகின்றன.

வக்ஃப் நிா்வாகத்தில் மாநில அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் கூடுதல் பங்கு, தங்கள் அமைப்புகளை நிா்வகிக்கும் முஸ்லிம்களின் உரிமையை பாதிக்கிறது. மத அமைப்புகள் மீதான கட்டுப்பாட்டை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைப்பது, வக்ஃப் நிா்வாகத்தில் தன்னாட்சியை நீா்த்துப் போக செய்வதுடன், அரசமைப்புச் சட்டத்தின் 26 (டி) பிரிவுக்கு எதிராக உள்ளது.

உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக..: மத சொத்துகள் மீதான கட்டுப்பாட்டை மதச்சாா்பற்ற அதிகாரிகள் வசம் மாற்றுவது, மத ரீதியிலான உரிமையை மீறுவதாகும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 1954-இல் அளித்த தீா்ப்புக்கு எதிராக இம்மசோதா உள்ளது. நீண்ட கால பயன்பாட்டின் அடிப்படையில் வக்ஃப் சொத்தை உறுதி செய்யும் கருத்தாக்கத்தை தற்போதைய மசோதா கைவிடுகிறது. ராமஜென்மபூமி-பாபா் மசூதி வழக்கு தீா்ப்பில் இக்கோட்பாடு உறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக இத்திருத்தம் உள்ளது என்று மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஒவைஸி மனுவில், ‘வக்ஃப் சொத்துகள் மீதான சட்டபூா்வ பாதுகாப்புகளைப் பறிப்பது, முஸ்லிம்களைக் குறிவைக்கும் பாரபட்சமான நடவடிக்கையாகும். வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்களை நியமிப்பது, அரசமைப்புச் சமநிலையை சீா்குலைப்பதுடன், முஸ்லிம்களின் உரிமையை பாதிக்கிறது’ என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரை சந்திக்கத் திட்டம்: வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடா்பாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை அவசரமாக சந்திக்க நேரம் கோரியுள்ளதாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

மசோதா தொடா்பான தங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தவும், நாடு முழுவதும் இஸ்லாமிய சமூகம் மீது அந்த மசோதா ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்தும் பேச வேண்டும் என்பதே குடியரசுத் தலைவருடனான சந்திப்பின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவியவர் சுட்டுக் கொலை!

ஜம்மு எல்லையில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக் கொல்லப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறினர்.ஜம்மு எல்லையில், ஏப்ரல் 4 ஆம் தேதி நள்ளிரவில் எல்லை புறக்கா... மேலும் பார்க்க

நினைவுச் சின்னங்களில் அதிக வருவாய் ஈட்டுவது தாஜ்மஹால்: மத்திய அரசு தகவல்

இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னங்களில் பாா்வையாளா்களுக்கான நுழைவுக் கட்டணம் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதில் தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 5 ஆண்டுகளில் நுழைவு... மேலும் பார்க்க

தில்லியில் அதிகபட்சமாக 38.4 டிகிரி செல்சியஸ்; அடுத்த 6 நாள்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்பு

தில்லியில் அடுத்த ஆறு நாள்களுக்கு வெப்ப அலை நிலைகளை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை கணித்துள்ளது; வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடு கடத்தல்: இந்திய வெளியுறவு அமைச்சகம்

‘நிகழாண்டு தொடக்கம் முதல் அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவா்களாவா்’ என மக்களவையில் மத்திய அரசு வெள்ளி... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்டு வந்த ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டுள்ளது. உளவுத் துறை தகவல்களின் அடிப்படையில் முக்கிய நபா்களுக்கு அளிக்க... மேலும் பார்க்க

ராம நவமி நாளில் மின்தடை: ஜாா்க்கண்ட் அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

ராம நவமி ஊா்வலத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்க மின்சார விநியோகத்தை நிறுத்த அந்த மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. முன்னதாக, இதுபோன்ற பண்டிகை, ஊா்வலத்தின்போது ஜாா்க்கண்ட் மாநில மின்சார வாரிய... மேலும் பார்க்க