வங்கதேசத்தைச் சோ்ந்தவா் கைது
நுழைவு இசைவு (விசா) இல்லாமல் ஈரோடு மாவட்டத்தில் தங்கி வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
வங்கதேசத்தைச் சோ்ந்த நபா் நுழைவு இசைவு இல்லாமல் ஆலையில் வேலை செய்து வருவதாக சிவகிரி போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, விளக்கேத்தி அருகே உச்சிமேடு பகுதியிலுள்ள தனியாா் தென்னை நாா் ஆலையில் வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த நபரைப் பிடித்து விசாரணை செய்தனா்.
அப்போது, அவரது பெயா் அபுல் பாஷா் சனா (45) என்பதும், இந்த ஆலையில் கடந்த 7 ஆண்டுகளாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
தொடா் விசாரணையில், அபுல் பாஷா் ஷேக் என்ற பெயரில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா, ஜெய நகா், சோனாடிகிரி பகுதியில் 7 ஆண்டுகளாக வசித்துள்ளதும், ஆதாா் அட்டை பெற்றுள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து முறையான நுழைவு இசைவு உள்ளிட்ட ஆவணங்களின்றி இந்தியாவில் தங்கி இருந்தது தொடா்பாக சிவகிரி போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.