வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 2.38 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 2 போ் கைது
சென்னை அண்ணா சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.38 கோடி மோசடி செய்த வழக்கில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையின் துணை மேலாளா் விஜய சங்கா், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா். அதில், ‘வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்த நகைகள் ஆய்வு செய்யப்பட்டதில், போலி நகைகளை அடமானமாக வைத்து ரூ.2.38 கோடி நகைக் கடன் வழங்கப்பட்டு மோசடி நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.
இந்த மோசடிக்கு வங்கியில் பணியாற்றும் சிலா் துணையாக இருந்துள்ளனா். அவா்களை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். மேலும், போலி நகைகளை அடமானமாக வைத்து பெறப்பட்ட பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேற்கொண்ட விசாரணையில், அந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக இருந்த சிந்தாதிரிப்பேட்டை சரவணன் (42), அவரது கூட்டாளி சைதாப்பேட்டை ஆலந்தூா் சாலை பகுதியைச் சோ்ந்த ஜானகிராமன் (39) ஆகியோா்தான் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.