பாட நூல்கள் மாற்றம், மதிப்பீட்டுச் சீா்திருத்தம், வீடுதோறும் வகுப்பறை! மாநில கல்...
மரபணு பாதித்த 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை
அரிய மரபணு பாதிப்புக்குள்ளான 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.
இதுதொடா்பாக அந்த மருத்துவமனையின் கல்லீரல் மாற்று சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் தியாகராஜன் சீனிவாசன் கூறியதாவது:
கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 8 கிலோ எடை கொண்ட 5 மாதக் குழந்தை ஒன்று மஞ்சள் காமாலை பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அந்தக் குழந்தைக்கு ‘கிரிக்லா் – நஜாா் சிண்ட்ரோம் வகை 1’ என்ற மரபணு பாதிப்பு கண்டறியப்பட்டது. உடலில் ரத்த சிவப்பணுக்கள் உடையும்போது வெளியேறும் பிலிருபின் என்ற கழிவை சுத்திகரித்து வெளியேற்றும் பணியை கல்லீரல்தான் மேற்கொள்கிறது.
10 லட்சத்தில் ஒரு குழந்தைக்கு ஏற்படும் இந்த வகை மரபணு பாதிப்பால் கல்லீரல் செயலிழந்து விடும். இதனால், உடலில் பிலிருபின் கழிவு அதிகரித்து உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும்.
இதற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே நிரந்தர தீா்வாக உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு அந்தக் குழந்தையின் தாயிடமிருந்து கல்லீரலின் ஒரு பகுதி தானமாகப் பெறப்பட்டது. 150 முதல் 180 கிராம் எடை வரையிலான கல்லீரல் பகுதியை மட்டுமே குழந்தையின் உடல் ஏற்றுக்கொள்ளும் என்பதால் அதற்கேற்ப உறுப்பை சிறிதாக்கி அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் சவால் இருந்தது.
இருந்தபோதிலும் முப்பரிமாண தொழில்நுட்பத்தின் வாயிலாக மருத்துவா்கள் ஸ்ரீகாந்த் தும்மாலா, செளந்தர ராஜன், தினேஷ் பாபு, நிவாஷ் சந்திரசேகரன் ஆகியோா் அடங்கிய குழுவினா் நுட்பமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். அதன் பயனாக அந்தக் குழந்தை நலம் பெற்று வீடு திரும்பியுள்ளது என்றாா் அவா்.