பொம்மையே வாழ்க்கை துணை... 4-வது பொம்மை குழந்தையை வரவேற்கும் இளைஞர் - பின்னணி என்...
வடிவேலு, ஃபஹத் ஃபாசில்! யார் மாயமான்? மாரீசன் - திரை விமர்சனம்!
நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் இணைந்து நடித்த மாரீசன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
படத்தின் கதை கன்னியாகுமரியில் ஆரம்பமாகிறது. பிரபல திருடனான ஃபஹத் ஃபாசில் கண்ணில் சிக்குவதையெல்லாம் திருடுகிறார். அப்படி ஓர் இரவில், அவரின் உள்ளுணர்வு சொல்லும் வீட்டைக் கொள்ளயடிக்கச் செல்லும்போது அங்கு கைகள் கட்டிப்போட்ட நிலையிலிருக்கும் வடிவேலு, ஃபஹத்தை திருடன் என அறிந்ததும் தன்னை அவிழ்ந்துவிட உதவினால் பணம் தருவதாகக் கூறுகிறார். பணத்திற்காக வடிவேலுவை அங்கிருந்து மீட்டு ஏடிஎம்-க்கு அழைத்து வரும் ஃபஹத், வடிவேலுவிடம் நிறைய பணம் இருப்பதை அறிந்துகொண்டு, அதை மொத்தமாகக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்.
அதேநேரம், வடிவேலுக்கு அடிக்கடி ஞாபக மறதி வந்துவிடும் என்பதால் எடிஎம் அட்டையின் பின் எண்ணை பெய முயற்சிக்கிறார். ஒருகட்டத்தில் இருவரும் இணைந்து பயணிக்கின்றனர். பயண முடிவு என்ன ஆனது? வடிவேலுவிடமிருந்த பணத்தை ஃபஹத் திருடினாரா என்பதை உணர்வுப்பூர்வமான திருப்பங்களுடன் பதிவு செய்திருக்கிறது மாரீசன்.
மாமன்னனுக்குப் பிறகு நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் இணைந்த நடித்த படமென்பதால் ஆரம்பக் காட்சிகளிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு, அடுத்தது என்ன என்கிற சுவாரஸ்யத்தைக் கொடுக்கிறது. ஞாபக மறதியால் தடுமாறும் வடிவேலு, அவரிடமிருந்து பணத்தை அபகரிக்கும் நோக்கில் சாமர்த்தியமாகக் காய்நகர்த்தும் ஃபஹத் என முதல்பாதி முழுக்க நகைச்சுவையாகவும் எமோஷன்லகளுடனும் நகர்கிறது. இடைவெளிக் காட்சி பிரமாதமாக அமைய, இரண்டாம் பாதியின் மேல் பெரிய ஆர்வம் எழுகிறது.
ஆனால், எகிறிய எதிர்பார்ப்புகள் எல்லாம் மெல்ல மெல்ல குறைவதுபோல் மாரீசனின் இரண்டாம் பாகம் அமைந்துவிட்டது. அண்மை காலமாக தமிழ் சினிமா பயன்படுத்தும் கதைக்கருவை கையில் எடுத்துக்கொண்டு சுவாரஸ்யமான கதாபாத்திரங்களைக் கொஞ்சம் வீணடித்ததுபோல் ஆகிவிட்டது. வடிவேலுவின் மனைவி கதாபாத்திரம், உண்மையில் இந்தக் குறையுடன் ஒருவர் இருந்தால் என்ன ஆவது என்கிற அதிர்ச்சியை அளித்தாலும் திரைப்படத்தில் அந்த ’ஒன்லைன்’ சரியாகக் கையாளப்படவில்லை. இதனால், சிறப்பான படமாக வந்திருக்க வேண்டிய மாரீசன் ஒருகட்டத்தில் பார்க்கலாம் ரகத்துடன் நின்றுவிடுகிறது.
இயக்குநர் சுதிஷ் சங்கருக்கு காட்சிகளை எப்படி எடுக்க வேண்டும், கதாபாத்திரங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற சினிமா நன்றாகத் தெரிந்திருப்பதால் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை எங்கும் சலிப்பில்லாமல் படம் செல்கிறது. இப்படத்தின் கதையை கிருஷ்ணமூர்த்தி என்பவர் எழுதியிருக்கிறார். ராமாயணத்தில் சீதையைக் கடத்துவதற்காக ராவணன் ஏவிய மாயமானான மாரீசனை கவனத்தில் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியிருக்கிறது.
வேலாயுதம் பிள்ளை (வடிவேலு), தயாளன் (ஃபஹத் ஃபாசில்) இருவரும் திருவண்ணாமலைக்குச் செல்வது அங்கிருந்து கிளம்பியதும் கதையின் திசை மாறுவது என ராவணன் - மாரீசன் - சீதை - சிவன் என்கிற படிமத்தை அழகாக இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றியிருக்கின்றனர்.
இது சமூகப் பிரச்னையை முன்னிருத்திய படமாக இருந்தாலும் தமிழ் சினிமா எப்போது இந்த கதைக்களத்திலிருந்து விலகுவார்கள் என தோன்றும் அளவுக்கு ஆகிவிட்டது. ஒருகட்டத்தில் இப்படம் கொலைகளை நியாயப்படுத்துவதும் சரியாக இல்லை.
இந்தியளவில் சிறந்த நடிகர்களான வடிவேலுவும் ஃபஹத் ஃபாசிலும் இப்படத்தில் வழக்கமான தங்கள் பாணிகளைக் கடந்து கதாபாத்திரங்களுக்கு வலுவாக இருந்துள்ளனர். வடிவேலு பேசும் வசனங்களும் அவருடைய மனைவியுடனான காட்சிகளும் உணர்வுப்பூர்வமாக இருப்பதற்கு வடிவேலுவின் நடிப்பே காரணம். வடிவேலுவுக்கான ஆடை வடிவமைப்பும் கச்சிதம்.
தொண்டி முதலும் த்ரிக்ஷாஷியும், வேட்டையன் படங்களில் ஃபஹத் திருடனாக நடித்திருந்தாலும் இப்படத்தில் அந்தச் சாயங்கள் எதுவும் இல்லாத திருடனாக நடித்திருக்கிறார். அந்த வித்தியாசம்தான் ஃபஹத் ஃபாசில்!
கோவை சரளா, லிங்கிஸ்டன், விவேக் பிரசன்னா உள்ளிட்டோரும் தங்கள் கதாபாத்திரங்களுக்குச் சரியான நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.
நீண்ட நாள்களுக்குப் பின் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை காட்சிகளுடன் பார்க்கும்போது உயிர்ப்பாக இருந்தது. முதல்பாதியில் ஃபஹத்துக்கும் வடிவேலுக்குவுமான நகைச்சுவைக் காட்சிகளுக்கு பின்னணி இசை கச்சிதமாக இருந்தன.
ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்ப அமைந்தாலும் பயணம் செய்கிற காட்சிகளையும் கிளைமேக்ஸுக்கு முந்தைய சண்டைக் காட்சியை இன்னும் நன்றாக செய்திருக்கலாமோ எனத் தோன்றியது.
ஒட்டுமொத்தமாக, ஒரு சுவாரஸ்யமான கதைக்கான முடிச்சுகள் உள்ள படமாகவே மாரீசன் உருவாகியிருக்கிறது. ஏமாற்றமில்லாமல், பார்க்கலாம்!
இதையும் படிக்க: மாரீசன் விழிப்புணர்வான படம்: வடிவேலு