அண்ணா நினைவு நாள்: பிப். 3 முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி!
வத்திராயிருப்பு புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வருவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
வத்திராயிருப்பு புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
வத்திராயிருப்பு-கூமாபட்டி சாலையில் கடந்த 2004-ஆம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்துக்குப் பேருந்துகள் வராமல், முத்தாலம்மன் கோயில் கடை வீதியில் பயணிகளை இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றன.
இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு வத்திராயிருப்பு தனி வருவாய் வட்டமாக அறிவிக்கப்பட்டது. பேருந்து நிலையம் அருகே வட்டாட்சியா் அலுவலகம் செயல்பட தொடங்கியது. ஆனாலும், பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வராததால், வட்டாட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனைக்கு செல்வோா் அவதிக்குள்ளாகினா்.
இதையடுத்து, கடந்த 2021-ஆம் ஆண்டு வத்திராயிருப்பில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை தொடங்கப்பட்டு, 30-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனாலும், பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வராததால், தற்போது, கனரக வாகனங்கள், வாடகை காா்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: வத்திராயிருப்புப் பேருந்து நிலையம் அருகே வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மருத்துவமனை, சாா்பு நீதிமன்றம், பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகின்றன. பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வராததால், பொதுமக்கள் முத்தாலம்மன் கோயில் திடலில் இறங்கி அரசு அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனா். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேருந்து நிலையத்தை பராமரிப்பு செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டோம் என அதிகாரிகள் அறிவித்தாலும், அடுத்த சில நாள்களில் மீண்டும் பழைய படி முத்தாலம்மன் கோயில் கடைவீதியோடு பேருந்துகள் திரும்பிச் சென்று விடுகிறன.
எனவே, பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.