PSU வங்கி பங்குகள் உயர்வு - முதலீட்டாளர்களுக்கு கவனம் அவசியம் | IPS FInance - 34...
வள்ளுவன்: "மொத்த பட வருமானத்தில் 80 சதவீதம்" - நடிகர்களின் சம்பளம் குறித்து இயக்குநர் R.K.செல்வமணி
விஷால் நடிப்பில் வெளியான 'நான் சிவப்பு மனிதன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த தெலுங்கு நடிகரான சேத்தன் சீனு நடித்திருக்கும் படம் வள்ளுவன்.
இயக்குநர் சங்கர் சாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை ஆறுபடை புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.செல்வமணி, ``புதிய தயாரிப்பாளர்கள்தான் தமிழ் சினிமாவை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளில் 2,500 திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அதில் 2,100 படத்தைத் தயாரித்தவர்கள் புதிய தயாரிப்பாளர்கள். அவர்கள்தான் இந்த சினிமா துறைக்குச் சோறு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் ஒரு படத்துடன் இந்தத் துறையைவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். ஒரு தொழிலின் வளர்ச்சி என்பது அவர்கள் அந்தத் தொழிலில் தொடர்ந்து இயக்குவதுதான். ஆனால் சினிமா அப்படி இல்லை.
1991 முதல் 2005 வரை நான் தொடர்ந்து படங்களைத் தயாரித்துக் கொண்டே இருந்தேன். அதற்குப் பிறகு என்னால் பெரிதாக படங்களைத் தயாரிக்க முடியவில்லை.
இன்று பல சூப்பர் ஸ்டார்களை, பல நடிகர்களை உருவாக்கிய தயாரிப்பாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டார்கள்.
மொத்த வருமானத்தில் 80 சதவீதத்தை தானே எடுத்துச் செல்லக் கூடியவர்தான் இன்று நடிகராக இருக்கிறார். டெக்னீசியன்களுடைய சம்பளத்தை யாரோ ஒருவர் எடுத்துச் செல்கிறார்.
ஒரு நடிகர் பிரபலமடையும் பொழுது, டிமாண்ட் செய்து, பிளாக்மெயில் போல சம்பளத்தை அள்ளிக்கொண்டு சென்றுவிடுகிறார்.
ஒரு படம் யாரால் வெற்றியடைகிறது என்பது கூட தெரியாமல், தன்னால்தான் அந்தப் படம் வெற்றி அடைகிறது என நினைத்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நடிகர், எத்தனை கோடி வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற சூழல் இருக்கிறது.
1991-ல் என்னிடம் 16 கார்கள் இருந்தன. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த கார்களுக்கு டீசல் போட கூட முடியாத நிலை வந்தது. அப்பொழுது நான் ஆட்டோ, பஸ், சைக்கிள் என என் பாதையை அமைத்துக்கொள்வேன்" எனப் பேசினார்.
















