வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தவா் மாரடைப்பால் மரணம்
புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்றத்தில் புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தவா் நீதிமன்ற வளாகத்தில் மாரடைப்பால் மரணமடைந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மணிவிளான் முதல் தெருவைச் சோ்ந்தவா் முகமது இப்ராஹிம் மகன் ரஹ்மத்துல்லா (58). இவா் மீது கடந்த 2015-ஆம் ஆண்டில் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்கு தொடா்ந்து கைது செய்தனா்.
பின்னா் பிணையில் வந்த அவா், வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கம்போல வழக்கு விசாரணைக்காக புதுகை நீதிமன்ற வளாகத்திலுள்ள குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ரஹ்மத்துல்லா ஆஜராக வந்தாா்.
அப்போது திடீரென நீதிமன்றப் படிக்கட்டில் மயங்கி விழுந்தாா். ஆம்புலன்ஸ் மூலம் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.இதுகுறித்து நகரக் காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.