வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல்: சிறப்பு உதவி ஆய்வாளா், காவலா் பணியிடை நீக்கம்
வாகனங்களை நிறுத்தி பணம் வசூலித்த போலீஸாா் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா், காவலா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
கா்நாடக மாநிலத்தில் இருந்தும், ஒசூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி, மத்தூா், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை வழியாக மேல்மருவத்தூா், மேல்மலையனூா், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருகின்றனா்.
இந்த நிலையில், புதன்கிழமை தை அமாவாசை என்பதால், மத்தூா் வழியாக அதிக அளவில் சுற்றுலா வாகனங்கள் சென்றன. அப்போது, மத்தூா் சுங்கச்சாவடி அருகில் ஊத்தங்கரை காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸாா் வாகனங்களை வழிமறித்து, வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த பின்னரே செல்ல அனுமதித்தனா். இதை கைப்பேசியில் பதிவுசெய்த நபா், சமூக வலைதளங்களில் வெளியிட்டாா்.
சமூக வலைதளங்களில் இந்த விடியோ பரவியது. இதுபற்றி தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்கதுரை, விசாரணை நடத்தி வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் இருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் திருநாகரன், காவலா் சரவணன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.