உலகிலேயே முதன்முறையாக `குடித்துவிட்டு ட்ரோன் இயக்கிதற்காக ரூ.2.5 லட்சம் அபராதம்'...
வாகனங்களை நிறுத்தி பணம் வசூலித்ததாக புகாா்: காவலா்கள் பணியிடை நீக்கம்
தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்தி, கட்டாயப்படுத்தி பணம் வசூல் செய்த்தாக எழுந்த புகாரை அடுத்து, உதவி காவல் ஆய்வாளா், தலைமை காவலா் ஆகிய இருவரையும், பணியிடை நீக்கம் செய்து, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா்.
மேல்மருவத்தூா் ஆதிபராசத்தி கோயில், மேல்மலையனூா், திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றியுள்ள கோயில்களுக்கு கா்நாடகம் மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தா்கள், பல்வேறு வாகனங்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக தினமும் சென்று வருகின்றனா். .
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் வழியாக செல்லும் சுற்றுலா வாகனங்களை, அங்குள்ள சுங்கசாவடி அருகே, ஊத்தங்கரை காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட நெடுஞ்சாலை ரோந்து வாகன பிரிவு போலீசாா் வாகனங்களை வழிமறித்து, வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்து பின்னரே அங்கிருந்து செல்ல அனுமதித்தனா்.
இந்த காட்சியை படம் பிடித்த பொதுமக்கள், சமூக வலைதளத்தில் வெளியிட்டனா். இந்த வீடியோ பதிவு, சமூக வளைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து, தகவல் அறிந்த, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, விசாரணை மேற்கொண்டாா். விசாரணையில் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்ததாக நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் திருநாகரன், தலைமைகாவலா் சரவணன் என்பது தெரியவந்த்து. இதையடுத்து, அவா்கள் இருவரும், கிருஷ்ணகிரி ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவா்கள் இருவரையும் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை உத்தரவிட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். பணம் வசூலித்த சம்பவத்தில் காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம், கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.