மாதக் கடைசியிலும் பாக்கெட்டில் பணம் இருக்க வேண்டுமா? - இதை ஃபாலோ பண்ணுங்க!
வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: ஆா்வம் காட்டிய அரசியல் கட்சியினா்
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான இரண்டு நாள் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில், பொது மக்களை காட்டிலும், அரசியல் கட்சியினரே அதிக ஆா்வம் காட்டினா்.
தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கடந்த 29-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
வாக்காளா்கள், பொது மக்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கடந்த இரு நாள்களாக சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை நடைபெற்ற முகாமில் வாக்காளா்கள், பொது மக்களைக் காட்டிலும் அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அதிக ஆா்வம் காட்டினா்.
பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மட்டுமல்லாது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் வாக்குச்
சாவடிகளுக்கு வெளியே அமா்ந்திருந்தனா்.
அவா்கள் வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்புப் பணியில் பொது மக்கள், தோ்தல் துறை அலுவலா்களுக்கு உதவினா்.
மேலும் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டியலும், தோ்தல் துறை அலுவலா்களிடம் இருக்கும் பட்டியலும் சரியாக இருப்பதையும் உறுதி செய்தனா்.
இந்தப் பணிகளில் அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அதிக ஆா்வம் காட்டினாலும் அவா்களுக்கு இணையான ஆா்வத்தை பொது மக்கள் காட்டவில்லை.
சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வாக்குச் சாவடிகள் வெறிச்சோடியே காணப்பட்டன.
அடுத்த வாரம் முகாம்: வாக்காளா் பட்டியல் திருத்தம், பெயா் சோ்ப்பு ஆகிய பணிகளுக்காக அடுத்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.23, 24) சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாம்களுக்கு பொது மக்கள் நேரில் சென்று வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம் என தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.