ஜப்பான் ஏர்லைன்ஸில் சைபர் தாக்குதல்; விமானங்கள் தாமதம், டிக்கெட் விற்பனை நிறுத்த...
வாஜ்பாய் பங்களிப்பை நன்றியுடன் போற்றுவோம்: எல். முருகன்
முன்னாள் பிரதமா் 'பாரத ரத்னா' அடல் பிகாரி வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த நாளில், அவரது பங்களிப்பை நன்றியுடன் போற்றுவோம் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-ஆவது பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அடல் பிகாரி வாஜ்பாயின் பங்களிப்பை நன்றியுடன் போற்றுவோம் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
முன்னாள் பாரதப் பிரதமர் 'பாரத ரத்னா' அடல் பிகாரி வாஜ்பாய் 100-வது ஆண்டு பிறந்த தினம் இன்று.
இதையும் படிக்க |இந்தியாவை வடிவமைத்த ராஜதந்திரி வாஜ்பாய்!- பிரதமா் மோடி புகழாரம்
இருபதாம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில், பாரத தேசம் அடையத் துவங்கிய அசுர வளர்ச்சிக்கு தனது ஆட்சிக் காலத்தில் வித்திட்ட வாஜ்பாய் , தொழில்நுட்பம் சார்ந்து தனக்கிருந்த தொலைநோக்குப் பார்வையின் மூலம் தேசத்தை கட்டமைக்கத் துவங்கினார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில், தங்க நாற்கரச் சாலை திட்டம் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளை சர்வதேச தரத்தில் கட்டமைத்ததன் விளைவாக, தொழில் போக்குவரத்திற்கு சாதகமான சூழல் கொண்ட தேசமாக இந்தியாவை உருவாக்கினார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தலைமையில், வாஜ்பாய் 1998-ஆம் ஆண்டு மேற்கொண்ட 'பொக்ரான்' அணு ஆயுத சோதனையின் மூலம், ராணுவ வல்லரசுகளுக்கு சிறிதும் குறைவில்லாத நாடு நமது பாரதம் என்பதை உலகிற்கு உணர்த்தினார்.
எதிர்க்கட்சித் தலைவராக, வெளியுறவுத் துறை அமைச்சராக, பிரதமராக ஆற்றிய பணிகள் ஏராளம். தனது தேர்ந்த அரசியல் அனுபவத்தின் மூலம் நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைத்தார்.
தனது வாழ்நாளின் பெரும்பான்மை காலத்தை, அரசியல் மூலம் நாட்டு மக்களுக்கு சேவை புரிவதில் அர்ப்பணித்து வாழ்ந்த, 'பாரத் ரத்னா' அடல் பிகாரி வாஜ்பாயின் 100 ஆவது பிறந்த நாளில், தேசத்தின் வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்புகளை நன்றியுடன் போற்றுவோம் என முருகன் கூறியுள்ளார்.