Lokah Chapter 1: தீபாவளிக்கு 'லோகா'வின் ஓடிடி ரிலீஸ்; வெளியான மோலிவுட் அப்டேட்!
`வானமே இடிஞ்சு விழுந்த மாதிரி இருந்துச்சி’ - கடலூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று காலை பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த சூழலில் வேப்பூரை அடுத்த அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு சொந்தமான நிலத்தில் சிவக்குமாரின் மனைவி ராஜேஸ்வரி உள்ளிட்ட பல பெண்கள் நேற்று மாலை மக்காச்சோளம் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் சுமார் 2.30 மணியளவில் பலத்த சத்தத்துடன் இடி இடித்ததால் அங்கு வேலை செய்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
மாலை சுமார் 4.30 மணிக்கு ஊர்க்காரர்களுக்கு போன் செய்த தவமணி என்ற பெண், `சிவக்குமார் நிலத்தில் நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது இடி இடித்தது. அப்போது நாங்கள் மயங்கி விழுந்துவிட்டோம். நான் இப்போதுதான் கண் விழித்தேன். மற்றவர்கள் மயக்கத்திலேயே கிடக்கிறார்கள்’ என்று கூறியிருக்கிறார். அதன்பிறகு ஊர்க்காரர்களும், பக்கத்து நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும் தவமணி சொன்ன இடத்திற்கு ஓடிச் சென்று பார்த்தனர். அப்போதுப் களையெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த நில உரிமையாளர் சிவக்குமாரின் மனைவி ராஜேஸ்வரி, கழுதூர் கிராமத்தை சேர்ந்த கனிதா, பாரிஜாதம், சின்னபொண்ணு என்கிற ராஜேஸ்வரி உள்ளிட்ட நான்கு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தனர்.

அதையடுத்து தவமணியை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அவர்கள், வேப்பூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். அதேபோல மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாருக்கும் தகவல் அளித்தனர். அதனடிப்படையில் அங்கு சென்ற எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் நான்குபேரின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வு சோதனைக்காக திட்டக்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தவமணி, `வானமே இடிஞ்சு விழுந்த மாதிரி இருந்துச்சி. அவ்வளவு வெளிச்சத்தை இதுவரை நான் பார்த்ததே இல்லை’ என்று மருத்துவர்களிடம் தெரிவித்திருக்கிறார். தவமணியின் நிலை குறித்துப் பேசிய மருத்துவர்கள், `தவமணி தற்போது அதிர்ச்சியில் இருக்கிறார். மின்னல் தாக்கியதில் அவரது கண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. எத்தனை சதவிகிதம் பார்வை திரும்ப வரும் என்பதை இப்போது உறுதியாக கூற முடியாது” என்ன்றனர்.
இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்திருக்கிறார்.
முதலமைச்சர் அறிவித்த ரூ.5 லட்சம் நிதியுதவித் தொகை அவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.50,000 இறுதிச் சடங்கிற்காக வழங்கினார்.