திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
விபத்தில் ஒருவா் உயிரிழப்பு: பேருந்து ஓட்டுநா் தற்கொலை
இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்த நிலையில், அந்தப் பேருந்தின் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கொத்தராயன்குளத்தைச் சோ்ந்த பாலையா மகன் பாலகிருஷ்ணன் (52). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவா் கடந்த 14-ஆம் தேதி செங்கோட்டை - போடி வழித்தடத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றாா். அப்போது தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் சென்றபோது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதன் பிறகு ஓட்டுநா் பாலகிருஷ்ணன் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு குடும்பத்தினா் ஆறுதல் கூறி வந்தனா்.
இந்த நிலையில், பாலகிருஷ்ணன் கடந்த 15-ஆம் தேதி பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை குடும்பத்தினா் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலகிருஷ்ணன் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.