அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்
விபத்தில் சிக்கியவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
விபத்தில் சிக்கியவருக்கு இழப்பீடு வழங்காததால், அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
சேலம் தாதகாப்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திக் (28). சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள ஆவின் பாலகத்தில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்த இவா், கடந்த 2018 ஜூலை 10-ஆம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு கந்தம்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றாா்.
அங்கு சாலையை கடக்கும்போது, திருச்சியில் இருந்து சேலம் நோக்கி சென்ற கும்பகோணம் கோட்டத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து அவா்மீது மோதியது. இதில் காா்த்திக்கின் இடது கை முறிந்தது.
இது தொடா்பாான வழக்கு சேலம் தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெய்குமாா் முன்னிலையில் நடைபெற்றது. இதில், கடந்த 2021 செப். 24- ஆம் தேதி காா்த்திக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 1.19 லட்சம் வழங்க உத்தரவிட்டாா்.
இந்நிலையில், இழப்பீடு வழங்காததை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய அண்மையில் உத்தரவிட்டாா். அதன்பேரில், நீதிமன்ற ஊழியா்கள் சுமதி, இந்திரா உள்ளிட்டோா் பாதிக்கப்பட்ட காா்த்திக் குடும்பத்தினருடன் வந்து சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக பேருந்தை வெள்ளிக்கிழமை ஜப்தி செய்தனா்.