Vetrimaaran: "அசுரனில் நான் வசனம் எழுதியது பெரிய விஷயமல்ல!" - அகரம் விதைத் திட்டம்
சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நாம் யார் என்பதை இதுதான் தீர்மானிக்கிறது...

நிகழ்ச்சியில் உரையாடிய வெற்றிமாறன், "இந்த நிகழ்வை வேடிக்கைப் பார்க்கும் எனக்கே இவ்வளவு நெகிழ்ச்சியாக இருக்கும்போது, அகரத்தைச் சேர்ந்தவர்களுக்கு இதை வழிநடத்தும் சூர்யா மற்றும் அவரது குழுவினருக்கு எவ்வளவு நெகிழ்ச்சியாக இருக்கும் என்பது தெரிகிறது.
இந்த மேடையில் ஒவ்வொரு மாணவரும் வந்து அவர்களது பயணத்தையும் இன்று அவர்கள் வந்தடைந்துள்ள இடத்தையும் பற்றிச் சொல்லும்போது, 'இந்த அகரம் இல்லாமல் இருந்திருந்தால் அவர்கள் வாழ்க்கை என்னவாக இருந்திருக்கும்' என்பதைத்தான் நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.
"எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு வாய்ப்பு கிடைக்கும். கொஞ்சம் பொருளாதார வசதியும் சமூகத்தில் செல்வாக்கும் கிடைக்கும். அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய முடிவெடுக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நாம் யார் என்பது தீர்மானமாகிறது.
15 ஆண்டுகளுக்கு முன்பு சூர்யாவிடம் இருந்த செல்வத்துக்கும் செல்வாக்குக்கும் அவர் என்ன வேண்டுமானாலும் செய்ய நினைத்திருக்கலாம். இன்னும் பெரிய தயாரிப்பு நிறுவனமோ வேற கம்பனியோ கூட தொடங்கியிருக்கலாம்.
ஆனால் விதை என்ற ஒரு திட்டம், அதன்மூலம் இளைஞர்களுக்கு கல்வின் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை, அதை யாரிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற தெளிவும் இருந்திருக்கிறது.

"ஏனென்றால் இங்கு இருக்கும் மாணவர்களும் அவர்களது 100% உழைப்பைப் போட்டிருக்கிறார்கள். அகரம் ஒரு கை என்றால் அந்த மாணவர்கள் இன்னொரு கை போட்டு 98% வெற்றியை எட்டியிருக்கிறார்கள். அந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்துள்ள விதமும் மிகச் சிறப்பானதாக உள்ளது.
தன்னார்வலராக இருக்க தைரியம் வேண்டும்!
"Human Kind என்ற ஒரு புத்தகத்தில், மனிதர்களை விட சிறந்த உயிரினங்கள் இந்த பூமியில் வாழ்ந்தபோதும் அவர்களால் பிழைத்திருக்க முடியாத சூழலிலும் மனிதர்களால் பிழைத்திருக்க முடிந்ததற்கு காரணம் நமக்கு மட்டும் இருக்கக் கூடிய அறிவைப் பகிர்தல் என்ற குணம் தான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"என்னிடம் இருக்கும் ஒன்றை நான் மற்றவருக்கு கொடுக்கிறேன். அதற்காக என் நேரம் செலவானாலும் சரி, பொருளாதாரம் செலவானாலும் சரி, பல விமர்சனங்களுக்கும், அவமானங்களுக்கும் நான் ஆளானாலும் சரி... என்னிடம் இருப்பதை நான் பகிர்ந்துகொள்கிறேன் என்ற சிந்தனைதான் நம்மை தனித்துவமாக உருவாக்கியிருக்கிறது.
இந்த சமூகம் நம்மை ஒரு இடத்தில் வைத்திருக்கிறது. அதற்கு நாம் என்ன திருப்பிக் கொடுக்கப்போகிறோன் என்பது மிகவும் முக்கியமான விஷயம். குறிப்பாக தன்னார்வலர்களாக இருப்பது கடினமான ஒன்று. எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம் ஆனால் நம் நேரத்தைக் கொடுப்பது என்பதற்கு மிகுந்த தைரியம் வேண்டும்.

"எனவே தன்னாவலர்கள் எல்லோருக்கும் நன்றி. என்னால் இதுபோன்ற முன்னெடுப்புகளுக்கு என் செல்வத்தைக் கொடுக்க முடியும். ஆனால் நேரத்தைக் கொடுக்க முடியுமா எனத் தெரியவில்லை.
இன்னும் அதிக தன்னார்வலர்கள் இணைய வேண்டும். அகரம் இன்னும் வலிமையாக செயல்பட்டு அவரது (சூர்யா) கனவை நிறைவேற்ற வேண்டும். இதில் படித்த மாணவர்கள் ரிலே போட்டி போல மீண்டும் தன்னார்வலர்களாக இணைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
"என்னை இந்த இடத்தில் நின்று இந்த மாணவர்களின் சாதனையை, ஒருதலைமுறையின் முன்னேற்றத்தை பார்க்க வைத்ததற்கு சூர்யா சாருக்கும், அகரத்துக்கும் நன்றி." எனப் பேசினார்.
அசுரனில் வசனம் எழுதியது பெரிய விஷயமல்ல!
அசுரன் திரைப்படத்தில் கல்வியை வலியுறுத்தும் வசனம் குறித்துப் பேசுகையில், "நடைமுறையில் அதைச் செயல்படுத்துபவர்கள் இருக்கும்போது, அதை வசனமாக எழுதியது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை" என்றார்.
நிகழ்வில் ஒளிபரப்பப்பட்ட காணொளியில், "அகரம் பவுண்டேஷன் மூலம் 6,378 மாணவர்கள் கல்வி பெற்றிருப்பதாகவும், அவர்களில் 4,800 மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டியிருந்தது.
அந்தக் காணொளியைத் தொடர்ந்து, அகரம் பவுண்டேஷனால் கல்விபெற்ற மாணவர்கள் மேடையில், "கல்வி பெற்று, வேலை பெற்று குறைந்தபட்சம் ஒருவரையாவது படிக்க வைப்போம்" என்று உறுதிமொழி ஏற்றனர்.
ட்ரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இதில், பறை உள்ளிட்ட தாள கருவிகள் இசைக்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து, அகரம் பவுண்டேஷன் மாணவர்களுக்கு உதவிய கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.