தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் ஓரணியில் திரள வேண்டும்: ஜி.கே...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி
தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாயில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.
தஞ்சாவூர் அருகே தெற்கு மானோஜிப்பட்டியை சேர்ந்த பழனி (36). கூலித் தொழிலாளி. இவரது தங்கை மகன் தமிழ்மணி (13). இருவரும் சனிக்கிழமை மாலை மானோஜிப்ட்டி கல்லணைக் கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தண்ணீரின் வேகம் காரணமாக இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர்.
அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி பழனி மற்றும் தமிழ்மணி இருவரையும் தேடி பார்த்தனர். இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தேடும் பணி நடைபெற்றது. வெட்டிக்காடு அருகே ரெகுநாதபுரம் பகுதியில் தமிழ்மணி உடலை அந்த பகுதி மக்கள் மீட்டு ஒரத்தநாடு போலீசாருக்கு தெரிவித்தனர். தொடர்ந்து தமிழ்மணி உடல் அடையாளம் காணப்பட்டு உடல்கூறாய்வுக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், பழனி உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்தது. இதில் பொட்டுவாச்சாவடி பகுதியில் செல்லும் கல்லணைக் கால்வாய் ஆற்றுப்பகுதியில் பழனியின் உடலை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டனர்.
பின்னர் பழனியின் உடல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.