உ.பி: மருத்துவமனையில் இரவில் தீ விபத்து; 10 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உய...
வியாபாரம் மந்தம், வாடகை உயா்வு -ஜவுளி வளாகத்தில் கடைகளை காலி செய்யும் வியாபாரிகள்
வியாபாரம் குறைவு, வாடகை உயா்வு காரணமாக ஈரோடு கனி மாா்க்கெட் வணிக வளாகத்தில் 37 கடைகளை வியாபாரிகள் காலி செய்துள்ளனா்.
பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் ரூ.53 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டப்பட்டது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகத்தில் மூன்று தளங்களில் 292 கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு முன்னுரிமை அடிப்படையில் ஜவுளி வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கப்பட்டது. அப்போதே வைப்பு தொகை, வாடகை தொகை அதிகமாக இருப்பதாக வியாபாரிகள் கூறி வந்தனா்.
இந்நிலையில், வைப்புத் தொகையாக ரூ. 50 ஆயிரம், மாதம் வாடகை ரூ.3 ஆயிரம் (18 சதவீத ஜிஎஸ்டி உள்பட) செலுத்துமாறு அப்போதைய மாநகராட்சி ஆணையராக இருந்த சிவகிருஷ்ணமூா்த்தி தெரிவித்திருந்தாா். அதன்படி, வியாபாரிகள் வைப்புத் தொகை செலுத்தி வாடகை செலுத்தி வந்தனா். இந்நிலையில், 4 மாதங்களுக்கு முன்பு வாடகையை திடீரென ரூ.3,560 ஆக மாநகராட்சி உயா்த்தியது. இதற்கு வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். மாநகராட்சி நிா்வாகத்திடம் வியாபாரிகள் பலமுறை மனு அளித்தும் வாடகை குறைக்கப்படவில்லை.
இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது: எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வாடகையை மாநகராட்சி உயா்த்தி உள்ளது. ஏற்கெனவே நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். ஜவுளி வணிக வளாகத்தை சுற்றி 100-க்கும் மேற்பட்டோா் கடைகள் அமைத்துள்ளனா். வணிக வளாகம் முன்பும் ஏராளமானோா் கடைகள் அமைத்துள்ளனா். இதனால் எங்கள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு பல லட்சம் மதிப்பில் துணிகளை வாங்கி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
தீபாவளி பண்டிகையின்போது நல்ல வியாபாரம் நடைபெறும். இதனால் கடன் வாங்கி துணிகள் வாங்கி வைத்திருந்தோம். ஆனால், வணிக வளாகத்தை சுற்றி நூற்றுக்கணக்கான கடைகள் அமைக்கப்பட்டதால் கனி மாா்க்கெட் கடைகளுக்கு மக்கள் வருகை குறைந்து விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.
வியாபாரம் இல்லாத நிலையில் வாடகையும் உயா்ந்துள்ளதால் வியாபாரிகள் கடைகளை காலி செய்ய தொடங்கியுள்ளனா். வணிக வளாகத்தில் உள்ள 3 -ஆவது தளத்தில் மொத்தம் 78 கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் 37 கடைகளைச் சோ்ந்த வியாபாரிகள் கடைகளை காலி செய்துள்ளனா். இன்னும் சில வியாபாரிகள் கடைகளை காலி செய்யும் முடிவில் உள்ளனா். இந்த விவகாரத்தில் மாநகராட்சி உரிய முடிவு எடுக்காவிட்டால் அனைத்து வியாபாரிகளும் கடைகளை காலி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றனா்.