''விலா எலும்பு உடைஞ்சும் எங்கம்மா கருவை கலைக்கல'' - ஒரு கலெக்டரின் கதை
''எங்கம்மா அப்போ அஞ்சு மாச கர்ப்பிணியா இருந்தாங்க. ஒருநாள் அங்கன்வாடிக்காக தண்ணி எடுத்துட்டு குடத்தை இடுப்புல வெச்சுக்கிட்டு நடந்து வந்திருக்காங்க.
அந்த நேரத்துல யாரோ ஒருத்தர் டூ வீலரை அம்மா மேல மோதியிருக்கார். அம்மா இடுப்புல வெச்ச குடத்தோட கீழ விழுந்திருக்காங்க. இதனால, அம்மோட விலா எலும்பு முறிஞ்சிப் போயிருக்கு. உடனே பக்கத்துல இருக்கிற சின்ன ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க. அந்த காலத்துல அங்க ஸ்கேன் வசதியெல்லாம் இல்ல. வெளிப்பக்கமா பார்த்துட்டு 'உங்க விலா எலும்புல ஒண்ணு உடைஞ்சுப்போச்சிம்மா'ன்னு சொல்லிட்டாங்களாம். அவ்ளோ வலியிலயும் எங்கம்மா, 'என் குழந்தைக்கு ஏதாவது ஆயிடுமோ'ன்னுதான் பயந்திருக்காங்க. அதுகேத்த மாதிரி அந்த ஹாஸ்பிடல்ல இருந்தவங்களும், கரு வளர வளர வயிறு பெருசாகி, விலா எலும்பெல்லாம் விரிஞ்சி வழிகொடுக்கும். அப்போ உங்களால மூச்சு விட முடியாது. உங்க உயிரைக் காப்பாத்திக்கணும்னா, உடனே டவுன் ஆஸ்பத்திரிக்குப் போயி இந்தக் கருவை கலைச்சிடுங்கன்னு சொல்லியிருக்காங்க. தவிர, இதனால, உங்க குழந்தை ஊனமா பிறக்கவும் வாய்ப்பிருக்குன்னு சொல்லியிருக்காங்க.
ஆனா, எங்கம்மா அதுக்கு ஒத்துக்கல. அஞ்சு மாசம் வளர்ந்த குழந்தையை என் உயிரைக் காப்பாத்திக்க கொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம். விலா எலும்பு உடைஞ்சதால எங்கம்மாவால சரியா சாப்பிட முடியல. அதனால, அந்தக் குழந்தை ரொம்பவும் எடைக்குறைவா தான் பிறந்திச்சாம். அத காப்பாத்துறதுக்காக எங்கம்மா மூணு வயசு வரைக்கும் தாய்ப்பால் கொடுத்திருக்காங்க. அந்தக் குழந்தைதான் நான். இப்போ நான் ஒரு ஐ.ஏ.எஸ்.'' - இதை படிக்கிறப்போ இது யாரோட கதைன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கில்ல.
ஒரு சிலரோட வாழ்க்கை மட்டுமே, பலருக்கும் 'வாழ்க்கையில ஜெயிச்சே ஆகணும்' என்கிற உத்வேகத்தைக் கொடுக்கும். அப்படிப்பட்டவர்கள்ல ஒருத்தரா இருக்கிற டாக்டர் வி.ராம் பிரசாத் மனோகர் ஐ.ஏ.எஸ்.ஸோட கதைதான் மேலே சொன்னது. இவர் தற்போது, பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
''படிக்கணும், ஜெயிக்கணும்கிறதுல ரொம்ப வைராக்கியமா இருந்தேங்ன்க நான். அந்த வைராக்கியம் எங்கம்மா சின்னத்தாய் கிட்ட இருந்துதான் வந்துச்சுன்னு நினைக்கிறேன். ராஜபாளையம் பக்கத்துல வடகரைதான் நான் பிறந்த கிராமம். அப்பா, போஸ்ட் ஆஃபீஸ்ல கடை நிலை ஊழியரா வேலைபார்த்துட்டு இருந்தாரு. இத்தனைக்கும் அப்பா ஒரு பட்டதாரி. படிச்சிருந்தாலும் சரியான வழிகாட்டுதல் இல்லைன்னா என்ன நடக்கும்கிறதுக்கு என் அப்பாவோட வாழ்க்கை ஓர் உதாரணம். ஆனா, அப்பா டிபார்ட்மென்ட் எக்ஸாம்ஸ் எழுதி படிப்படியா முன்னேறி, போஸ்ட் மாஸ்டரா ரிட்டயர்ட் ஆனார். அம்மா அங்கன்வாடி டீச்சரா வேலைபார்த்துட்டு இருந்தாங்க. அம்மா வயித்துல நான் இருந்த நேரத்துலதான் அம்மாவுக்கு அந்த விபத்து நடந்திச்சு. மத்த இடத்துல எலும்பு உடைஞ்சா கட்டுப்போடலாம். ஆனா, விலா எலும்புல கட்டுப்போட முடியாதே. ஒட்டி வைக்கிற மாதிரி ஏதோ சிகிச்சை செஞ்சிருக்காங்க. அதுக்கு மேல சிகிச்சை செய்ய வசதியில்ல. எலும்பு உடைஞ்சா அதுவே சேருமில்லியா... அந்த மாதிரிதான் சேர்ந்திருக்கு. ஆனா, இப்பவும் அம்மா ஏதாவது கடினமா வேலை செஞ்சா அந்த வலிக்குதுன்னு சொல்வாங்க'' என்றவருடைய குரலில், அவருடைய அம்மாவின் வலி தெரிகிறது.
''ஸ்கூல் படிக்கிறப்போ டாக்டர் ஆகணும்னு கனவு கண்டேன். ஆனா, நுழைவுத்தேர்வுல 0.75 மதிப்பெண்ல குறைஞ்சதால அரசு மருத்துவ கல்லூரியில சீட் கிடைக்கல. தனியார்ல கிடைச்சது. அதுக்கு எங்களால செலவழிக்க முடியாதே... சரின்னு மெரிட்ல கிடைச்ச கால்நடை மருத்துவம் படிக்க ஆரம்பிச்சேன். கூடவே, டாக்டர் மாதிரியே சமூகத்துக்கு சேவை செய்யுற வேற துறைகள் என்ன இருக்குன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். அப்போ எனக்கு ரெண்டு துறைகள் நினைவுக்கு வந்துச்சு. ஒண்ணு சயின்டிஸ்ட். இன்னொண்ணு கலெக்டர். யங் சயின்டிஸ்ட் ஃபெல்லோஷிப்புக்கு அப்ளை செஞ்சேன். இன்டர்வியூவுக்கு கூப்பிட்டாங்க. போனேன். இந்தியாவுல இருந்து மொத்தம் பத்து பேரைத்தான் செலக்ட் செஞ்சாங்க. அந்த பத்து பேர்ல நானும் ஒருத்தன். வானமே கைல வந்த சந்தோஷத்துல இருந்தேன். ஆனா, 'ஸ்டிரைக் காரணமா உங்க காலேஜ் 6 மாசம் இயங்கல. அதனால உங்களுக்கு இந்த ஃபெல்லோஷிப் கொடுக்க முடியாது'ன்னு சொல்லிட்டாங்க. அந்தக் காலகட்டத்துல நான் அழாத நாளே இல்ல. என் ஃப்ரெண்ட்ஸ்தான் என்னைத் தேத்தினாங்க.
சரி, கலெக்டராகலாம்னு முடிவெடுத்தேன். கால்நடை மருத்துவ கல்லூரியிலேயே 'சிவில் சர்வீஸ் எக்ஸாம்'க்கு படிச்சிட்டு இருந்தவங்களோட நானும் சேர்ந்துக்கிட்டேன். படிக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல சில வருடங்கள் தோல்விதான் கிடைச்சது. ஆனா, நான் விடாம போராடினேன். ஐ.ஆர்.எஸ், ஐ.எஃப்.எஸ்னு ரெண்டு பணிகள் கிடைச்சது. ஆனா, நான் ரெண்டுலயும் ஜாயின் செய்யாம, மறுபடியும் சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்கு படிக்க ஆரம்பிச்சேன். இந்த முறை ஐ.பி.எஸ் கிடைச்சது. ஏற்கெனவே பார்த்துட்டிருந்த கால்நடை மருத்துவர் வேலையை ராஜினாமா செஞ்சிட்டேன். ஆனா, ஐ.பி.எஸ்-ல உடனே ஜாயின் பண்ணல. மறுபடியும் லீவ் வாங்கி படிச்சு சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதிட்டு, ஐ.பி.எஸ் டிரெயினிங்ல ஜாயின் பண்ணேன். ஒரு வருஷம் ட்ரெயினிங் முடிச்ச நேரத்துல தேசிய அளவுல 97-வது ரேங்க்கோட ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணேன். நினைச்சதை அடைஞ்சே ஆகணும்கிற வைராக்கியமும் போராட்ட குணமும் இருந்தா, எல்லாரும் ஜெயிக்கலாம்'' என்கிறார் டாக்டர் வி.ராம் பிரசாத் மனோகர் ஐ.ஏ.எஸ்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...